பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95

பூவின் சிரிப்பு



காந்தியடிகள் நமக்குத் தகுந்த வேளையில் எச்சரிக்கை செய்ய வந்து தோன்றினார். நாட்டின் விடுதலைக் காக அவர் அரும்பாடுபட்டார். மிகப் பெரிய தியாகங்களைச் செய்தார். ஆனால் ஹிம்சையாலும், போராலும் விடுதலை வேண்டாம் என்றும் அவர் அழுத்தந்திருத்தமாகக் கூறிவிட்டார்.

அவருடைய வழி ஒன்றே இன்றைய உலகத்திற்கு ஏற்றது. அவருடைய வழி புதியதல்ல; ஆனால் அவர் அவ்வழியை அரசியலிலே புகுத்தியது ஒரு புதுமை; புரட்சியான புதுமை. உலகமே வியக்கும்படியான புதுமை. எல்லா வாழ்க்கைத் துறைகளுக்கும், செயல் களுக்கும் ஏற்ற வழி அது என்று அவர் மெய்ப்பித்துக் காட்டினார்.

அன்பு, அஹிம்சை, சத்தியம் என்ற அடிப்படையிலே இயங்கினால்தான் இனி உலகம் உய்ய முடியும். இல்லா விட்டால் மனித இனமே அழிந்து போய் விடும். மற்றொரு உலகப்போர் வருமானால் மலைகளிலும் காடுகளிலும் வாழும் பழங்குடி மக்களைத் தவிர மற்ற மக்கள் அனைவரும் இறந்துபடுவார்கள்’ என்று பேரறிஞர் ஐன்ஸ் டைன் கூறியுள்ளதை மறந்து விடக்கூடாது. இப்படிப் பட்ட நிலை ஏற்படாமல் தடுப்பதற்கு மனிதன் தன் உள்ளத்திலே மறைந்து கிடக்கும் அரக்க உணர்ச்சிகளை மாற்றக் கற்றுக்கொள்ளவேண்டும். அதற்குக் காந்தியடிகளின் வழியே சிறந்ததாகும். அடிகள் பாரத நாட்டின் அடிமைத் தளையை அறுக்க மட்டும் தோன்றியவரல்ல என்று மீண்டும் கூறுகின்றேன். உற்ற வேளையில் உலகத்திற்கு ஏற்ற வழியை எடுத்துக்காட்டவே அவர் வந்தார். அவர் வழியைப் பின்பற்றி மனித இனம் ஓங்க வேண்டும்.

-