பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெஞ்சமின் ஃபிராங்ளினின்

மின் சக்திக்கு அவர் வைத்த பாசிட்டிவ், நெகட்டிவ் என்ற கலைச் சொற்கள்தான் இன்றும் உலகப் பழக்க வழக்கத்தில் பயன்பட்டு வருகின்றன.

20. மின்சாரமும் மின்னலும் ஒன்றுதான் என்பதே ஆதாரங்களோடு நிரூபித்து முதன்முதலாகக் கூறியவரும் அந்த மாமேதை பெஞ்சமின்தான்.

21. கட்டடங்கள் மேல் விழுகின்ற இடி, மின்னலின் அபாயகரமான ஆபத்துக்களின் விளைவுகளைத் தடுக்கும் ‘இடி தாங்கி’ என்ற புதிய கருவியைக் கண்டுபிடித்து உலகுக்குக் கொடுத்த மாமனிதர் பிராங்ளின்தான். அந்த கண்டுபிடிப்பின் பயன் என்ன? மக்களின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை இன்றும் இயற்கையின் இழப்பிலேயிருந்து தற்காத்துக் கொள்கிறோம் இல்லையா?

22. பென்சில்வேனியா நகர சட்டசபையில் அவர் பதினான்கு ஆண்டுகள் உறுப்பினராக பணியாற்றியுள்ளார். அதன் செல்வாக்கை மக்கட் பணிக்காக நாட்டு விடுதலைக்காக நிலைநாட்டினார் பெஞ்சமின்.

23. எழுத்துத் துறையிலே புகுந்த அவர், சாமுவேல் ரிச்சர்ட்சன் என்பவர் எழுதிய நாவலை முதன் முதலாக அச்சடித்து, அமெரிக்க நாவல் உலகுக்கு முதல் நாவலை வழங்கியவரும் பிராங்ளின்தான்.

24. அக்காலத்தில் மிக முக்கியமான செய்திப் பத்திரிகையாக விளங்கிய ‘பென்சில்வேனியா கெசட்டை’ பெஞ்சமின் ஃபிராங்ளின்தான் சொந்தமாக நடத்திக்காட்டினார்; வெற்றியும் பெற்றார்.

25. அந்த பத்திரிக்கைதான், இன்றும் அமெரிக்காவிலே வெளிவந்து கொண்டிருக்கும் “சாட்டர் டே ஈவினிங் போஸ்ட்” அதாவது ‘சனிக்கிழமை மாலை அஞ்சல்’ Saturday Evening Post என்ற பத்திரிகையாகும்.