பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

மரத்தின் மீது ஏறி அமர்ந்து திருட்டுத் தனமாக பந்தயங்களைப் பெண்கள் பார்ப்பது மரண தண்டனைக்குரிய குற்றம் என்பது நாட்டின்சட்டம். அப்படி இருக்கும்பொழுது எப்படி விடுவார்கள் அந்த மங்கையை?

குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்பட்டாள். கொடுமையான தண்டனையை எதிர்பார்த்துக் காத்திருப்பவள் தன்னைப்பற்றிய விளக்கத்தைக்கூற அனுமதிக்குமாறு வேண்டிக் கொண்டாள்.

“எனது மகன் பெசிடோரியஸ் என்பவன் இன்று இங்கு மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்டான். அவனது தந்தை தான் அவனுக்குப் பயிற்சியளித்து வந்தார். இடையிலே அவர் அகால மரணமடைந்து விட்டதால், நான் தான் பயிற்சியைத் தொடர்ந்து என் மகனுக்கு அளித்து வந்தேன்.

போட்டியின்போது என்மகன் எப்படி சண்டை செய்கிறான் என்று பார்க்க எனக்கு ஆர்வம் இருக்காதா? என் உயிரே போனாலும் பரவாயில்லை. வெற்றி பெறப் போராடும் என் மகனை இந்தக் களத்திலே பார்க்க வேண்டும் என்ற வேகத்தினால் இந்த நாட்டுச் சட்டத்தையும் மறந்து விட்டேன். தாய் தன் மகனைப் பார்க்க வந்தது தவறு என்றால், உங்கள் மரண தண்டனை தான் அதற்கு உகந்த பரிகாரம் என்றால், நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.”