பக்கம்:பெரியார் அறிவுச் சுவடி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை


பழைமையாளர்களுக்கு இது கலியுகம், பகுத்தறிவாளர்களுக்கோ இது புது யுகம். இந்தப் புதுயுகம் பூத்ததும் ‘அதிசய விளைவு’களை எதிர்பார்த்தான் பாரதி; ‘அறிவியல் விளைவு’களை எதிர்பார்த்தான் பாரதிதாசன். இந்த இருவரும் இன்று நம்மிடையே இல்லை; அவர்கள் எதிர்பார்த்த விளைவுகளிலும் இன்று நாம் பெரிதும் ஏமாற்றமே அடைந்திருக்கிறோம்.

சான்றுக்கு ஒன்று போதும். அன்று தொட்டு இன்று வரை ‘அரி நமோத்து சித்தம்’ என்று ஆரம்பமாகும் பெரிய ‘அரிச்சுவடி’, பள்ளிக்கூட வசதியில்லாத பட்டிதொட்டிகளில் மட்டுமல்ல, நகரங்களிலும், தெருத் தெருவாக விற்பதும், பகுத்தறிவற்ற பாமர மக்கள் அதை வாங்கித் தம் குழந்தைகளுக்குப் படிக்கக் கொடுத்து, அவற்றை முளைக்கும்போதே முட்டாள்களாக்கி விடுவதும்தான் அது.

தன்னிகரற்ற தன்மானத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி அதை ஒரளவேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ‘பெரியார் அறிவுச் சுவடி’ என்ற இச்சிறு நூலை வெளியிட்டிருக்கிறேன். வசதியுள்ளவர்கள் இதைப் பெருமளவில் விலை கொடுத்து வாங்கி வசதியில்லாதவர்களுக்கு இலவசமாக வழங்கி மகிழ வேண்டுமென்பது என் ஆசை.

இந்நாள் இளந்தமிழர்கள் அந்த ஆசையைத் தங்களால் இயன்ற வரை நிறைவேற்றி வைப்பார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு. அத்துடன் இதுவரை ‘பெரிய அரிச்சுவடி’யை மட்டுமே விற்று வந்த அன்பர்கள், இந்தப் ‘பெரியார் அறிவுச் சுவடி’யையும் விற்க முன் வருமாறு வேண்டுகிறேன்.

வணக்கம்,
விந்தன்
சூலை 1, 1973
சென்னை - 30