பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

103

வதும் மதிப்போடும் மரியாதையோடும் நடத்துவதும் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரின் இன்றியமையாக் கடமையாகும் என்பதை பெருமானார் வலியுறுத்தியுள்ளார். இதற்கு ஏற்ற இலக்கணமாக வாழ்ந்தும் காட்டியுள்ளார்.

உதவுவதில் பேரின்பம்

மனித நேயம் போற்றும் இனிய பண்பு இளமைதொட்டே பெருமானாரிடம் குடி கொண்டிருந்ததை பல நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டி விளக்குகின்றன.

நற்குணங்களின் பிறப்பிடமாகத் திகழ்ந்த நாயகத் திருமேனி அவர்கள் பிறருக்கு உதவுவதில் பேரின்பம் கொண்டார். சின்னஞ்சிறு வயது முதஅலே இந்நற்பழக்கம் இவரிடம் குடிகொண்டிருந்தது. தான் சிறுவராக இருந்தபோது கடை வீதிக்கு ஏதேனும் பொருள் வாங்கச் செல்லவேண்டியிருந்தால் வழியில் இருக்கும் வீட்டுக் கதவுகளையெல் லாம் தட்டி, ‘நான் கடைவீதிக்குப் பொருள் வாங்கச் செல்கிறேன்’ என்று கூறிச் செல்வது அவர் பழக்கம். பிறருக்கு உதவியாக இருப்பதில் பேரின்பம் காணும் பேருள்ளமுடையவர் பெருமானார். எனவே, யார் என்ன பொருள் வாங்கி வரப் பணித்தாலும் அப் பொருளை நம்பிக்கையோடு வாங்கி வந்து தருவது வழக்கம். இவ்வினிய பண்பால் இவரைப் பலரும் ‘அல்-அமீன்’ என்றே அழைத்தார்கள். இதற்கு ‘நம்பிக்கையாளர்’ என்பது பொருளாகும்.

இளமைதொட்டே ஆடம்பர உணர்வற்றவராக திகழ்ந்தார் பெருமானார். சகிப்புணர்ச்சியையும் எளிமையையும் இரு கண்களாகக் கொண்டொழுகியவர். மனித நேயத்தை வளர்க்கும் ஊற்றுக்கண்ணாக எளிமையை எண்ணி வாழ்ந்தவர். எந்தச் சூழ்நிலையிலும் ஆடம்பர உணர்வு அவரை அணுகியதே இல்லை.

அண்ணல் நபிகள் நாயகம் (சல்) இறை தூதராக மட்டுமல்லாது நாட்டுத் தலைமையேற்று அரசோச்சிய காலத்தும்