பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

கூட மிக எளிமையாகவே வாழ்ந்து வந்தார். ஒரு சமயம் பெருமானார் இல்லம் வந்த உமர் (ரலி) அண்ணலாரைக் கண்டு மனத்துயர் கொண்டார். காரணம், பெருமானார் வாழ்ந்து வந்த வீட்டின் நிலை.

பச்சை மண் செங்கல் கொண்டு கட்டப்பட்ட சாதாரண சிறிய அறை. பேரீச்ச இலைகளால் வேயப்பட்ட மேற் கூறை; வீட்டினுள் ஒரு கயிற்றுக் கட்டில்; பேரீச்ச இலைச் சருகுகள் திணிக்கப்பட்ட தோலுறையாலான தலையணை; விரிப்பாகப் பயன்படக்கூடிய ஒரு தோல் பாய்; தண்ணீர் வைப்பதற்கான தோலாலான நீர் பாத்திரம்; இவையே அந்த அறையில் இருந்த பொருட்கள். கட்டிலில் பெருமானார் படுத்திருந்தற்கு அடையாளமான கயிற்றுத் தழும்புகள் முதுகெங்கும் பதிந்திருந்தன. இதைக்கண்டு மனம் வருந்திய உமர் (ரலி) மற்ற நாட்டுத் தலைவர்களெல்லாம் ஆடம் பர உச்சாணியில் உல்லாசமாக வாழும்போது மாபெரும் அரபு நாட்டின் தலைவரான தாங்கள் ஒரளவாவது ஆடம் பரத்துடன் வசதியாக வாழக்கூடாதா? என வினா எழுப்பினார். இதைக் கேட்ட பெருமானார் ‘இறைவன் எளிமையையே விரும்புகிறான். எளிமை வாழ்வு வாழும் எளியவர்களையே அல்லாஹ் மிகவும் நேசிக்கிறான். அவர்களே மறுமைப் பேரின்பம் பெற தகுதி பெறுகிறார்கள். எனவே, நான் மறுமைப் பேரின்பமும் பெரு வாழ்வும் பெறுவதைத் தாங்கள் விரும்பவில்லையா?’ என எதிர்க்கேள்வி கேட்டு எளிமை வாழ்வின் சிறப்பை உணர்த்தினார்.

அண்ணலார் எப்போதும் சாதாரண முரட்டு நூலாடையையே உடுத்துவது வழக்கம். மிக மிக எளிய உணவு வகைகளையே உண்பார். பேரீச்சம் பழமும் தண்ணிருமே அவரது அன்றாட ஆகாரப் பொருட்களாக இருந்தன. குளிர்ந்த நீரை விரும்பிக் குடிப்பார். சில சமயம் சுத்தமான பாலை விரும்பி அருந்துவார். வயிறு முட்ட உண்பதை விட அரை வயிறு உண்பதையே அதிகம் விரும்புவார்.