பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

கண்ட முதல் நாள் தொடங்கி அடுத்த ஷவ்வால் மாத முதல் பிறை காணும்வரை அம்மாதம் முழுமையும் பகலில் உண்ணாலும் ஒரு சொட்டு நீரும் பருகாமலும் இஸ்லாம் விதித்துள்ள விதிமுறைகளில் இம்மியும் பிசகாது நோன்பு நோற்க வேண்டியது ஒரு முஸ்லிமுக்குரிய கட்டாயக் கடமை (ஃபர்ள்) ஆகும்.

நோன்பின் நோக்கம்

அதிகாலை நான்குமணிக்கு முன்னதாகவே உண்பதும் பருகுவதும் நிறுத்தப்படுகிறது. மீண்டும் முன்னிரவு ஆறரை மணிவாக்கில் நோன்பு முடிக்கப்படுகிறது. அதற் குப் பிறகே எதையும் உண்ணவோ பருகவோ முடியும்.

இறைவன் தன் திருமறையில் “ல அல்லகும் தத்தகன்” (இதனால் நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்) எனக் கூறியுள்ளான். இதிலிருந்து இறையச்ச உணர்வைப் பூரணமாக உள்ளத்தில் உருவாக்கி நிலைபெறச் செய்வதே நோன்பின் முழுமுதல் நோக்கமாகும்.

ரமளான் நோன்பின்போது இறைவன் மனிதனுக்கு விலக்கி வைத்தவைகளின்றும் அறவே விலகியிருக்கிறான். அல்லாஹ் இட்ட கட்டளையை இம்மியும் பிசகாது முழுமையாக மனக்கட்டுப்பாட்டோடு நிறைவேற்றுகிறான். அல்லாஹ்வின் அன்பையும் அவன் அளிக்கும் வெகுமதியையும் பெறுகிறான். அதற்கான பயிற்சிக் களமாக அமைந்திருப்பதே ரமளான் நோன்பு.

மனக்கட்டுப்பாடும் மனஉறுதியும் மிக்கவராக வாழ நோன்பு பெருந்துணை புரிகிறது. “எல்லா வகையிலும் மனத்தைக் கட்டுப்படுத்துவதுதான் தூய்மையான போராட்டம்” (ஜிஹாதுல் அக்பர்) என்றார் நபிகள் நாயகம் (சல்) அவர்கள்.

நோன்புக் காலத்தில் தீய செயல்கள் எதையும் செய்