பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

115

துன்பத்தைப் போக்குவதில், தன்னைச் சுற்றியுள்ளவர்களிடையே ஆதிக்கம் செலுத்தும் இல்லாமையை விரட்டு வதில்-விருப்போடு பங்கேற்கிறார். உணவும் உடையும் பணமும் தருவதில் மகிழ்ச்சி கொள்கிறார். இதற்கான கடமையாக அமைந்துள்ள ‘ஜகாத்’ கடமையை நிறைவேற்றுவதில் கண்ணுங்கருத்துமாக இருக்கிறார்.

இஸ்லாத்தின் நான்காவது கடமையான ‘ஜகாத்’ ரமளான் மாதத்தில்தான் முழுமையாக நிறைவேற்றப்படுகிறது. அதனால் ரமளான் ஈத்துவக்கும் மாதமாகவும் அமைந்துள்ளது.

சமுதாய வாழ்வில் தான் முயன்று பாடுபட்டு உழைத்துத் தேடிய பொருள் முழுமையும் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற தன்னல உணர்வைப் போக்குவதே ரமளான் மாதத்தில் அதிகமாகச் செயல்படுத்தும் ஜகாத் கடமையின் நோக்கம். தான் தேடிய வருமானத்தில், அவ்வருவாய்க்கு எவ்விதத் தொடர்பும் இல்லாத, வறுமைவாய்ப்பட்ட ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் உழைத்து வாழ இயலா ஊனமுற்றோர்க்கும், முதியவர்கட்கும் பயணத்தில் இருக்கும் வறியவர்கட்கும், கடன் துன்பத்தில் மூழ்கிக் கொண்டிருப்பவர்கட்கும் நாற்பதில் ஒரு பங்கு அதாவது இரண்டரை சதவிகிதம் உரிமை உண்டு என்பதை எண்பிப்பது ரமளான் மாதம். அவர்கட்கு வழங்கும் ஜகாத் உதவியும் இடது கை செய்வது வலது கைக்குத் தெரியா வண்ணம் தரப்படவேண்டும் என்பது ‘ஜகாத்’ விதியாகும். ஜகாத்தை வெளிப்படையாக, பலரறிய, விளம்பரமாக வழங்கினால் உரிய பலன் கிட்டாது என்பது இறையாணை.

தான் உழைத்துத் தேடிய செல்வத்தை இறையாணைப் படி ஜகாத் தருவதன் மூலம் ஒரு முஸ்லிம் எத்தகைய தியாகத்திற்கும் தன்னைப் பொருத்தமுடையவராக ஆக்கிக் கொள்கிறார்.