பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

117

இறைவனை வணங்குவதாகும். ஹஜ் எனும் புனிதப் பயணம் உள்ளத்தாலும் உடலாலும் பொருளாலும் இறைவனை வணங்கிப் போற்றும் வணக்க முறையாகும்.

ரமளான் மாதம் இறைவனின் திருமறை மனிதகுலத்துக் கிடைத்த புனித மாதமுமாகும். ரமளான் 27 ஆம் நாளன்று ‘லைலத்துல் கத்ர்’ இரவன்று ஹிரா மலைக்குகையில் இறை தியானத்தில் இருந்த பெருமானாருக்கு வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) மூலம் திருமறையின் முதன் நான்கு இறை வசனங்கள் முதன் முதலாக வழங்கப்பட்டது. எனவே, மறை பிறந்த இறைமாதமாக ரமளான் திங்கள் போற்றப்படுகிறது. அன்று தொடங்கி பெருமானார் மறைவுவரை 23 ஆண்டுகள் திருமறை சிறிது சிறிதாக வழங்கப்பட முழுமையடைந்தது.

தராவீஹ் எனும்
சிறப்புத் தொழுகை

ரமளான் மாதம் முழுமையும் இரவு தோறும் ‘தராவீஹ்’ எனும் சிறப்புத் தொழுகை சுமார் ஒரு மணிநேரம் கூட்டுத் தொகையாக நிறைவேற்றப்படுகிறது. இத் தொழுகைகளின் போது திருமறை வசனங்கள் முழுமையாக ஓதி முடிக்கப்படுகின்றன. தனித் தொழுகையிலும் கூட்டுத் தொழுகைகளே அதிகமாக நடைபெறுகின்றன. ஒரே இறைவனாகிய அல்லாஹ்வை நினைந்து, ஒரே மறையாகிய திருக்குர்ஆன் வழி ஒழுகி, ஒரேவித வணக்க முறையை உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் பின்பற்றி இறையருள் வேண்டி இப்புனித ரமளான் ஈதுல் ஃபித்ர் பெருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.