பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

123

குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் இருந்தே தம் ஆடம்பர ஆடைகளையும் அணிமணிகளையும் முழுமையாக களைந்து விட்டு வெற்றுடம்புமீது தைக்கப்படாத இரு துண்டு துணிகளைப் போர்த்திக் கொள்கிறார்கள். இதுவே ‘எஹ்ராம்’ உடை என அழைக்கப்படுகிறது. அரசராயினும் ஆண்டியாயினும் அனைவரும் ஒரே மாதிரியான எஹ்ராம் உடை உடுத்துவது கட்டாயமாகும். இதே உடை தான் இறந்த (மையத்) சடலத்தின் மீது போர்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சமத்துவ உணர்வு

கஃபாவில் எஹ்ராம் உடையணிந்த முஸ்லிம்கள் அனைவரும் ஒரே மாதிரியாகக் காட்சியளிக்கின்றனர். அவர்கள் பல்வேறு நாடுகளை, மொழிகளை, பண்பாட்டை, கலாச்சாரப் போக்குகளை, வாழ்க்கை முறை களை, நடையுடை பாவனைகளைப் பேணுபவர்கள், பல்வேறு நிறத்தினர். ஆனால் ஹஜ்ஜின்போது அனைவரையும் அன்புச் சகோதரர்களாகக் கருதுகின்றனர்.

ஒரே மொழியில் ஒருசேர “லப்பைக் அல்லாஹாம்ம லப்பைக்” என முழங்குகிறார்கள் “இறைவா! இதோ உன் ஆணைக்கிணங்க வந்து விட்டேன்!” என்பது இதன் பொருளாகும். இறைவன் முன்னிலையில் அனைவரும் சமம் என்ற நம்பிக்கையைப் பெறுகிறார்கள்.

ஹஜ்ஜின் உச்சகட்ட நிகழ்ச்சியாக ஹாஜிகள் அருகிலுள்ள அராஃபாத் மைதானத்தில் கூடாரமிட்டு ஒரு நாள் தங்குகிறார்கள். ஒரே மாதிரியான கூடாரங்களில் ஒரே மாதிரியான எஹ்ராம் உடையணிந்த ஹாஜிகள் அனைவரும் ஒரே மாதிரியான இறையுணர்வோடவே இறை வணக்கம் புரிகின்றார்கள். இங்கும் ஹாஜிகள் இறைவனை நோக்கி மேற்கண்டவாறு முழங்குகிறார்கள். துஆ செய்கின்றார்கள்.