பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

131

களையும் ஏற்றுக் கொண்டால்தான் முழுமையான முஸ்லிமாக முடியும்.

முந்தைய நபிமார்களுக்கும்
பெருமானாருக்கும் உள்ள வேறுபாடு

பெருமானாருக்கும் அவருக்குமுன் தோன்றிய நபிமார்களுக்கும் ஒரு பெரும் வேறுபாடு உண்டு. முந்தைய நபிமார்களான தீர்க்கதரிசிகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சார்ந்த, இனத்தைச் சார்ந்த, மொழி பேசிய, நாட்டு. எல்லைக்குட்பட்ட மக்களுக்கு வழிகாட்ட வந்தார்கள். ஆனால், அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் வழி காட்ட இறைவனால் அனுப்பப்பட்டவர்கள். அவனிக்கோர் அருட்கொடையாக இறுதி இறைத் தூதராக வந்துதித்தார்கள்.

பெருமானாருக்கு முன் தோன்றிய நபிமார்கள் அனைவருமே ஓரிறைத் தத்துவத்தையே போதித்துச் சென்றார்கள். ஆனால், அவர்கள் மறைவுக்குப்பின், அவர்களைப் பின்பற்றியவர்களாகக் கூறிக்கொண்டவர்கள், அவர்தம் போதனைகளில் பலப்பல மாற்றங்களை, திருத்தங்களை காலவோட்டத்தில் செய்து, அவ்வக்கால உணர்களுக்கேற்ப, விரும்பிய வண்ணம் விளக்கங்களைத் தந்து, மூலத் தத்துவமாகிய ஓர் இறை தத்துவதத்துக்கு மூக்கு விழியெல்லாம் வைத்து, மாற்றங்களை ஏற்படுத்த முனைந்தார்கள். இதன் விளைவு, எந்தத் தீர்க்கதரிசி ஓரிறைத் தத்துவத்தை முனைப்புடன் போதித்தாரோ, அவரையே, அந்தத் தீர்க்கதரிசியையே நாளடைவில் கடவுளாக ஆக்கி விடலானார்கள்.

எந்தத் தீர்க்கதரிசியும் தாங்கள் வாழ்ந்த காலத்தில், தங்களை இறைவனாக வணங்குமாறு பணித்ததே இல்லை. காலவோட்டத்தில் இந்நபிமார்களில் பலரும் கடவுளாக்கப்பட்டு விட்டார்கள். ஆனால், நபிகள் நாயகம் (சல்)