பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

133

செய்தியை உபதேசிப்பவராக மட்டுமல்லாது திருமறைக்கேற்ப வாழ்ந்தும் காட்டிய அழகிய முன் மாதிரியாகத் திகழ்ந்த மனிதப் புனிதரும் ஆவார்.

ஆகவேதான், நபிகள் நாயகம் (சல்) திருமறைக்கு விளக்கமாக எடுத்துக் கூறிய உபதேசங்கள், அவற்றை மெய்ப்பிக்கும் வகையில் பெருமானார் வாழ்ந்துகாட்டிய வாழ்க்கை நெறிமுறைகள் ஆகியவற்றின் தொகுப்பான ‘ஹதீஸ்’ திருமறைக்கு அடுத்த நிலையில் முஸ்லிம்களால் போற்றப்பட்டும் பின்பற்றப்பட்டும் வருகிறது.

ஆதாம் (அலை) முதல்
தொடங்கிய இஸ்லாம்

இஸ்லாமிய நெறி நபிகள் நாயகத்தால் உருவாக்கி வளர்க்கப்பட்டது அன்று. இறை நெறியாகிய இஸ்லாம் முதல் மனிதரும் முதல் நபியும் ஆகிய ஆதாம் (அலை) முதுல் இறுதி நபி பெருமானார் (சல்) வரை தோன்றிய ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் நபிமார்களாலும் வளர்க் கப்பட்டு வந்த மார்க்கமாகும். இறுதி நபி பெருமானார் (சல்) இஸ்லாமிய மார்க்கத்தை நிறைவு செய்த பெருமைக்குரியவராவார்.

‘இஸ்லாம்’ என்ற அரபிச் சொல்லுக்கு ‘இறைவனிடம் தன்னை ஒப்படைத்தல்’ என்பது பொருளாகும். இறை வனின் கட்டளைகளையும் வழிகாட்டுதலையும் முழுமையாக ஏற்றுச் செயல்படுவதே இஸ்லாமியக் கோட்பாடாகும். இறைவனின் பேராற்றலை அறிந்து அவன் காட்டிய நெறியில் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே முஸ்லிம் ஆவான்.

இளமை வாழ்வு

அரேபியாவில் அக்காலத்தில் மிகப் பெரும் வணிக மையமாக விளங்கிய மக்கா நகரில் அப்துல்லா - ஆமினா