பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

137

வேளைகளில் வானவர் தலைவர் ஜிப்ராயில் (அலை) மனித வடிவில் தோன்றி என்னுடன் பேசுவார். அப்போது அவர் கூறுவதை நான் மனத்தில் இருத்திக் கொள்வேன்”. (புகாரீ 1-1) எனப் பெருமானார் கூறியுள்ளதிலிருந்து வானவர் வடிவிலும் ஒலி வடிவிலுமே பெருமானாருக்கு இறைச் செய்தி முழுமையும் அருளப்பட்டது என்பது தெளிவாகிறது.

ஹிரா குகையில் முதல் இறைச் செய்தியை வானவர் ஜீப்ராயில் மூலம் பெற்ற அண்ணல் நபி (சல்) அவர்கள் உடல் நடுக்கமுற்றவராக விரைந்து இல்லம் சேர்ந்து தம் துணைவியார் கதீஜா பிராட்டியாரிடம் நடந்தவைகளைக் கூறினார். பெருமானார் கூறயதனைத்தையும் கேட்டறிந்த அம்மையார் முழுமையாக நம்பியதோடு அண்ணலாரை இறை தூதர் - நபியாகவும் முழு மனதோடு ஏற்று உறுதி கொண்டார். இவ்வாறு இறை மார்க்கமான இஸ்லாமிய நெறியில் அன்னை கதீஜா தன்னை முதன்மையாளராக இணைத்து முஸ்லிமானார். பின்னர், அபூபக்கர், சித்தீக், மாவீரர் அலி போன்றோர் இஸ்லாத்தில் நம்பிக்கை கொண்டு இணைந்தனர்.

இன்றைய உலக மக்களில் நான்கில் ஒருவர் வீதம் நம்பிக்கை வைத்துள்ள இஸ்லாம் மார்க்கம் இவ்வாறு தான் வளரலாயிற்று.

பல தெய்வ உருவ வழிபாட்டில் மூழ்கிக் கிடந்த மக்காவாசிகளான குறைஷிகள் உருவமற்ற, இணை, துணை இல்லாத ‘அல்லாஹ் ஒருவதே இறைவன்’ என்று பெருமானார் கூறுவதை ஏற்க மறுத்தனர். தீயவழிகளில் ஒழுக்கக் கேடர்களாக வாழ்ந்த மக்கா வாசிகளில் சிலர் பெருமானார் கூறும் நன்னெறிகளைக் கேட்டு வெகுண்டனர்.