பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

அராஜகங்களை அன்பு வழியில் மேற்கொண்டிட வந்து உள்ளார். தீமையைத் தீமையினால் வென்றிடாமல் தீமையை நன்மையினால் வென்றிட, மறுகன்னத்தைக் காட்டிட இதோ புறப்பட்டு விட்டார்.

இஸ்லாத்தின் சகிப்புத் தன்மையையும் அண்ணல் முகமது நபி (சல்) அவர்களின் உயரிய பண்புகளையும் உலகிற்குக் காண்பித்து அறவழி. அன்புவழிச் சமயமாம் இஸ்லாத்தின் கொள்கைகளைப் பரப்ப முன்வந்துள்ளார் கள். ‘பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்’ என்ற நூலின் வாயிலாக அழிவுப் பாதையிலிருந்து மக்களை அன்புப் பாதைக்கு அழைக்கின்றார் ஆசிரியர்.

நானும் அந்த அன்புவழி, அறவழி. சமத்துவம், சகோதரத்துவம் பேசும் சமயவழி வந்தவன் என்ற காரணத்தால் இந்த அணிந்துரை எழுத முனைந்துள்ளேன். எனது இருகரங்களை நீட்டி என் அன்புச் சகோதரர் மணவை முஸ்தபா அவர்களை அணைத்து அவரது கன்னம் மீது எனது கன்னம் வைத்து முத்தமிட்டு உச்சிமுகர்ந்து வாடா மலர்களினால் வாழ்த்துகின்றேன்.

கிறிஸ்தவம் - இஸ்லாத்தின் பொது நோக்கு என்ன?

கிறிஸ்தவமும் இஸ்லாமும் ஒரு நற்கனிதரும் மரத்தின் மாபெரும் இரு கிளைகள். இம்மரத்தின் ஆணிவேர் ‘செமிடிக்’ யூதச் சமயம் ஆகும். இதனால்தானோ என்னவோ கிறித்துவத்தின் மத போதகராக நான் காணப்பட்டாலும் இந்நூலில் குவிந்துகிடக்கும் கருத்துக் குவியல்களை ஏடாகோடமாக அள்ளி அருந்தியும் எனக்கு எந்த அஜீரணமும் ஏற்படவில்லை. எனது நம்பிக்கைக்கு முற்றிலும் மாறுபட்ட எதிரும் புதிருமாக இருக்கக்கூடிய கருத்துகளாக தென்படவுமில்லை.

உண்மையைச் சொல்லப்போனால் எவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவில் இஸ்லாத்தின் கருத்துகளை