பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

ஊழி மழையின்போது கப்பலோடு ஆறுமாத காலம் கடலில் மிதந்த ‘நோவா’ எனும் நூஹ் (அலை) பிற உயிரினங்களோடு ஜூதி எனும் மலையில் இறங்கியதும் இதே ஆஷுரா நாளன்று தான்.

“ஓர் இறைக் கொள்கையை உரமாக மக்களிடையே பரப்பி, அதனால் சினமுற்ற நிம்ருது எனும் கொடுங்கோல் மன்னன் தந்த எண்ணற்ற துன்பங்களை ஏற்ற ‘ஆப்ரஹராம்’ எனும் இபுராஹீம் (அலை) பிறந்ததும், ‘இறைத்தூதர்’ எனும் ‘கலீல்’ பட்டத்தை அல்லாஹ்விடமிருந்து பெற்றதும் இதே முஹர்ரம் பத்தாம் நாளாகிய ஆஷுரா நாளன்றுதான்.

‘இறைவனைத் தவிர வணங்குதற்குரியவர் வேறு யாருமில்லை’ எனப் பிரச்சாரம் செய்த மோசஸ் எனும் மூஸா (அலை) பிர்அவ்னின் கொடுங்கோன்மையினின்றும் தப்பிச் செல்லும்போது செங்கடல் பிளந்து நின்று வழிவிட்டுக் காத்ததும் இதே ஆஷுரா நாளில் தான்.

ஜீஸசாகிய ஈஸா (அலை) அவர்களைக் கொலையாளிகளிடமிருந்து இறைவன் விண்ணுக்கு உயர்த்திக் கொண்ட தும் இப்புனிதமிகு ஆஷூரா நாளின்போதுதான் என்பது வரலாறு.

இஸ்லாமியக் கோட்பாட்டின்படி வானம், பூமி, சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள் அனைத்தும் அல்லாஹ்வால் படைக்கப்பட்டதும் முஹர்ரம் பத்தாம் நாளன்றுதான். முதன்முதலாக மண்ணுலகின் இறைவனருளால் மழை பெய்வித்ததும் புனிதமிகு முஹர்ரம் அன்று தான்.

மனுக்குலத்தின் இறுதித் தீர்ப்பு நாள் ஆஷூரா தினத்தன்றே அமையும் என்பது இறைமறை தரும் செய்தியாகும்.