பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

மக்களை வழிநடத்த இறைவனால் அனுப்பப்பட்ட அத்தனை நபிமார்களும் ஏதேனும் அற்புதங்கள் வியக்கத் தக்க வகையில் நிகழ்த்தி, அதன்மூலம் மக்களுக்கு அச்சம் கலந்த இறை நம்பிக்கையை ஊட்டி இறைவழி செலுத்தினர்.

ஆனால், இறுதித் தூதராக அவனிபுரக்க வந்த அண்ணல் நபிகள் நாயகம் (சல்) மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய, அற்புதங்களை நிகழ்த்தவில்லை. மந்திர தந்திரங்களால் மக்களின் அறிவுக்கு அப்பாற்பட்ட அமானுசிய காரியங்களை - இயற்கை கடந்த செயல்களைச் செய்து, அதன் மூலம் இறை நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. பகுத்தறிவைப் பயன்படுத்தி, சிந்திக்கத் தூண்டி, அதன் மூலம் உண்மையைத் தாங்களே உணர்ந்து தெளிந்து அதன் வழி ஒழுக, வழிகாட்டியவர் பெருமானார் அவர்கள்.

மனிதன் துய்த்து
மகிழவே அனைத்தும்

மனிதனுக்கு ஏவல் செய்ய, அவனுக்கு முழுமையாகப் பயன்படுவதற்கென்றே இறைவன் நிலத்தையும் வானத்தையும் நீரையும் காற்றையும் மலைகளையும் படைத்துள்ளான். அவற்றில் அவனுக்கு வேண்டிய அனைத்தையும் பொதிந்து வைத்துள்ளான். ஆனால், அவற்றில் பலவற்றை நேரடியாகக் கண்டு அனுபவிக்கும் வகையில் வைக்கவில்லை. மறை பொருளாக உள்ள அவற்றை, மனிதன் தன் பகுத்தறிவைக் கொண்டு, தன் சிந்தனை ஆற்றலின் துணையால் ஆய்ந்து கண்டறிய வேண்டும். அதன் பின்னரே அவற்றை அனுபவிக்கும் உரிமை மனிதனுக்கு உண்டு என்பது திருமறை கூறும் இறை கட்டளையாகும்.

மறை பொருளறிய
ஆய்வறிவு

“ஒரு நாழிகை நேரம் இறைவனின் படைப்புகளைப்