பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

169

புரட்டிப் பார்த்தாலும் அங்கே நீக்கமற நிறைந்திருக்கும் பண்பு எளிமைத் தன்மையாகும். வாழ்க்கையில் எத்தனைப் படித்தரங்கள் உண்டோ அத்தனைப் படித்தரங்களிலும் வாழ்ந்து காட்டிய இம்மனிதப் புனிதர், தொடக்கம் முதல் இறுதிவரை எளிமையின் உருவமாகவே வாழ்ந்து மறைந்த வராவார். ஏழைச்சிறுவராக வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, பெருஞ்சொத்துக்கு அதிபதியாக அன்னை கதீஜா பிராட்டியாரின் கணவராக-மாபெரும் இஸ்லாமியப் பேரரசின் தலைமைப் பொறுப்பைப் பெற்றவராக வாழ்ந்த காலத்திலும் இவரை ஆடம்பரப் போக்குகள் அணுகியதே இல்லை. எளிமையின் உருவமாகவே வாழ்ந்து வழிகாட்டிச் சென்றவர் அண்ணல் நபி (சல்) அவர்கள்.

ஆடம்பரமற்ற எளிமையான சிக்கன வாழ்க்கை என்றால் அது கருமித்தனமாக வாழ்வது அல்ல. சிக்கனம் வேறு, கருமித்தனம் வேறு, நல்ல காரியங்களுக்கும் உன்னதமான நோக்கங்களுக்கும் நாம் வாரி வழங்க வேண்டும். அதே சமயத்தில், வீண்செலவுகளைப் பொருத்தவரை, அவற்றைச் சுருக்கி, சிக்கனப்படுத்த வேண்டும் என்பதுதான் பெருமானார் போதனை.

எளிமையின் எல்லைக்கோட்டில் வாழ்ந்த மனிதப் புனிதர் மாநபி அவர்கள் மண்ணால் கட்டப்பட்ட சிறிய அறைகளிலேயே வாழ்ந்து வந்தார்கள். அந்த வீட்டின் கூரை பேரீச்ச மர ஒலைகளாலேயே வேயப்பட்டிருந்தன. அண்ணலாரின் ஆடைகள் முரட்டுத்துணியாலானதாகவே இருக்கும். அவர்களின் படுக்கை மிகவும் எளிமையாக இருக்கும். பெருமானாரின் உடலில் படுக்கைப் பாயின் அழுத்தல் அடையாளங்கள் காணப்படுவதுண்டு அவரது படுக்கையில் சாதாரண தலையணையே இருக்கும்.

எளிமையின் இலக்கணமாக வாழ்ந்த பெருமானார் விரும்பியிருந்தால் ராஜபோகமாக வாழ்ந்திருக்க முடியும்