பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

எனக் கூறி உழைப்பின் மேன்மையை உணர்த்தினார் பெருமானார் அவர்கள்.

உழைப்பும் ஒருவகை
இறைவணக்கமே

மற்றொரு சமயம் பெருமானார் முன்பாக ஒரு விவாதம் நடைபெற்றது. “இஸ்லாமியத் தோழர் ஒருவர் எப்போதும் இறைச் சிந்தனையிலேயே லயித்தபடி உள்ளார். ஐவேளைத் தொழுகையோடு அமையாது பகல் இரவு எந்நேரமும் இறை வணக்கத்திலேயே நாட்டமுடையவராக இருக்கிறார். யாரோடும் அதிகம் பேசுவதுமில்லை. வணக்கத் தலத்தை விட்டு வெளியே சுற்றித் திரிந்து எவ்வித வெளி இன்பத்தை நுகர்வதுமில்லை. இறைச் சிந்தனைக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்த இறையடியாராக உள்ளார்” என நபித் தோழர்கள் புகழ்ந்து பேசி, “இவர் எல்லோரிலும் மேம்பட்டவர் அல்லவா?” என வினவினர்.

இதைக்கேட்ட பெருமானார் அவர்கள் “இத்தொழுகையாளி உணவுக்கு என்ன செய்கிறார்?” என்று தம் தோழர்களை நோக்கிக் கேட்டார். அதற்கு நபித் தோழர்கள், “இவருக்கு ஒரு தம்பி உண்டு. இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் வேண்டிய உணவை அத் தம்பிதான் உழைத்துச் சம்பாதித்து அளித்து வருகிறார். அவர் ஐவேளைத் தொழுகைக்கு மேல் தொழுவதில்லை” என்று கூறினர்.

இதைக் கேட்ட பெருமானார் “அண்ணனினும் மேலானவர் அவர் தம்பி தான். மேலும், தம்பிக்கே சுவனப் பேரின்பமும் இறைவனால் வழங்கப்படும். ஏனெனில், கடுமையாக உழைத்து உண்பதை, பிறருக்கு உண்ணக் கொடுப்பதையே இறைவன் மிகவும் விரும்புகிறான். அவர்களே இறையருளைப் பெறத் தகுதி படைத்தவர்கள், இறைவன் பார்வையில் மேன்மைமிக்கவர்கள்” எனக் கூறி உழைப்பின் மேன்மையை, உழைத்துண்ணும்