பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

173

இன்பத்தையே உயரிய இன்பம், அதுவும் ஒரு வகையான வணக்க முறையே என்பதை உணர்த்தினார் பெருமானார் அவர்கள்.

உழைப்பின் பயனை அனுபவிக்கும்
உரிமை உழைப்பாளிகட்கே யுண்டு

அது மட்டுமல்ல, சிலர் உழைப்பதும் அவ்வுழைப்பின் பலனைப் பலர் அபகரித்து அனுபவிப்பதையும் இஸ்லாம் எதிர்க்கிறது. உலகில் எழும் பெரும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கெல்லாம் ஊற்றுக் கண்ணாக விளங்கும் இச்சுரண்டல் வாழ்க்கையைப் பெருமானார் கடுமையாக எதிர்க்கிறார். உழைப்பின் பலனை முழுமையாக அனுபவிக்கும் உரிமை உழைப்பாளிகட்கே உண்டு என முழங்குகிறது இஸ்லாம்.

“உழைத்துத் தொழில் செய்யும் இறையடியார் மீது இறைவன் அளவற்ற அன்பு காட்டுகிறான். உழைத்துத் தொழில் செய்யாது, பிறர் உழைப்பைச் சுரண்டி வாழ்வோர் மீது இறைவன் கடுங்கோபம் கொள்கிறான்.” என அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மொழிந்துள்ளார்கள்.

இவ்வாறு என்றென்றும் போற்றிப் பின்பற்றத்தக்க உயரிய வாழ்க்கைப் பண்புகளைச் செயல் வடிவாக உலகத்துக்கு உணர்த்தி வழிகாட்டிச் சென்றவர் பெருமானார்.

நன்றி: அனைத்திந்திய வானொலி நிலையம், சென்னை.