பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

177

புனிதத் தன்மையடைகிறது. இதைப்பற்றி இறைவன் தன் திரு மறையில் “நபியே! அவர்களுடைய பொருள்களிலிருந்து ஜகாத்தை வசூல் செய்து நீர் அவர்களைத் தூய்மைப் படுத்தி பரிசுத்தமாக்கும்” (9:103) எனக் கூறுகிறான். இதற் கேற்ப ‘தூய்மை’ எனும் பொருளிலேயே ‘ஜகாத்’ எனும் அரபிச் சொல் அமைந்துள்ளது.

ஜகாத்தும் சதக்காவும்

இஸ்லாம் பிறருக்கு வழங்கும் பொருள்தருமத்தை இரு பிரிவுகளாகப் பகுத்து விதியாக்கியுள்ளது. ஜகாத், சதக்கா என்பவைகளே அவை. ஜகாத் என்பது செல்வந்தர்களின் சொத்தில் ஏழைகளுக்குரிய பங்காகும். சதக்கா என்பது ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டி சாதாரண தருமமாகும்.

ஏழை வரியாகிய ஜகாத் பெருமானார் முஹம்மது நபி (சல்) அவர்கட்கும் முன்னதாக உலக மக்களுக்கு வழிகாட்ட இறைவனால் அனுப்பப்பட்ட இறை தூதர்கள் பலருக்கும் இறையாணையாக விதிக்கப்பட்டிருந்தது என்பதை இறை மறையாகிய திருக்குர்ஆன் தெளிவாக எடுத்துக் கூறுகிறது. அதே ஜகாத் முறை பெருமானார் (சல்) அவர்கட்கு திருத்தமான முறையில் இறையாணையாகத் தரப்பட்டது.

உழைப்பை உன்னதமாகப் போற்றும் இஸ்லாம், அவ்வுழைப்பின் மூலம் சம்பாதிக்கும் வருமானமும் நேரிய வழியில் நியாயமான சம்பாத்தியமாக இருக்க வேண்டும் எனப் பணிக்கிறது. இவ்வாறு ஆகுமான ஹலாலான வருமானமே ஜகாத் கடமைக்குரியதாகும். இத்தகைய வருமானத்திலும் கவனக் குறைவால் தெரிந்தோ தெரியாமலோ ஏதேனும் தவறான வருமானம் வந்து சேர்ந்திருப்பின் ‘ஜகாத்’ வழங்குவதன் மூலம் அத் தவறும் முற்றாகத் துடைக்கப்பட்டுவிடுகிறது. சொத்தும் தூய்மை பெறுகிறது.

12