பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

இரண்டின் மதிப்புக்குச் சமமான அல்லது அதற்கு மேலுள்ள தொகைக்கு நாற்பதில் ஒரு பங்கு என்ற விகிதத்தில் பங்கிட்டு ஜகாத் வழங்கப்படவேண்டும் என இஸ்லாம் விதிக்கிறது. குடியிருக்கும் வீட்டிற்கும் அன்றாடம் பயன்படுத்தும் பண்ட பாத்திரங்கள் போன்ற பொருட்களுக்கும் இச் சொத்து மதிப்பிலிருந்து விலக்கு உண்டு. இரண்டரை சதவீத ஜகாத் என்பது விளை பொருட்களைப் பொருத்த வரையில் சிறிது வேறுபாடு உண்டு. புன்செய் பயிர் வருமானத்துக்கு இரண்டரை சதவிகித ஜகாத் என்றால் நன் செய் பயிர்கட்கு ஐந்து சதவீத ஜகாத் உண்டு.

இத்தகைய ஜகாத்தைப் பெற தகுதியுடையோர் யாரெல்லாம் என்பதையும் இஸ்லாம் தெளிவாக வரையறுத்துக் கூறியுள்ளது.

ஜகாத் பெறத் தகுதியுடையோர்

ஒரு முஸ்லிமின் செல்வத்திலிருந்து நாற்பதில் ஒரு பங்கை ஜகாத்தாகப் பெறும் உரிமையுடையவர் எட்டு வகையினர் என அவர்களை இஸ்லாம் இனம் பிரித்துக் கூறுகிறது. முதல் பகுதியினர் தங்களது வாழ்க்கையைப் பிறர் துணையின்றி நகர்த்த இயலாத ‘ஃபக்ர்’ எனும் வறியவர்கள். இவர்கள் வறுமை வாய்ப்பட்டபோதிலும் பிறரிடம் கையேந்தி நிற்க அஞ்சும் பகுதியினர்; அநாதைகளைப் போலுள்ள பரம ஏழைகள்; மூன்றாம் பகுதியினர், செல்வர்களிடமிருந்து ஏழை எளியவர்கட்காக ஜகாத்தை வசூலிக்கும் பணியில் ஈடுபடுபவர்கள்; இவர் தாங்கள் வசூலிக்கும் ஜகாத் தொகையில் எட்டில் ஒரு பங்கைப் பெற தகுதியுடையோராவர். நான்காம் பகுதியினர், இஸ்லாத்தில் புதிதாகத் தங்களை இணைத்துக் கொண்டதுடன் இஸ்லாமிய நெறிமுறைகளை மேலும் மேலும் தெரிந்து கொள்ள அவாவும் புதிய முஸ்லிம்கள். இவர்கள் தங்கள்