பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

193

கூறினார். “உலகிலேயே மிக அழகான நீண்ட கடற்கரை பிரேசில் நாட்டுத் தலைநகரான ரியோடிஜெனீரோவில் உள்ளது. இரண்டாவது அழகிய நீண்ட கடற்கரை நாங்கள் வாழும் சென்னை நகரையொட்டி அமைந்துள்ள மெரினா கடற்கரையாகும்.” என நான் அப்பெண்மணி கூறியதையொட்டித் துணைத் தகவலாகக் கூறினேன். நானும் என் துணைவியாரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று அறிந்தவுடன் எங்களோடு நெருக்கமாக ஒட்டிக் கொண்டார். மிகுந்த அன்போது பழகினார். இந்தியாவைக் குறிப்பிடும் போதெல்லாம் ‘ஹோலி லேண்ட்’ (புனித பூமி) எனும் சொல்லை அடிக்கடி பயன்படுத்தினார். அதில் அன்பு கலந்த மரியாதை வெளிப்பட்டது. தான் புனிதமிகு இந்திய நாட்டை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைச் சுற்றிப் பார்த்திருப்பதாகவும் உலகில் வேறு எங்கும் காண முடியாத ஆன்மீக உணர்வு பொங்கும் நாடாக இந்தியாவைக் கண்டதாகவும் கூறிப் பாராட்டினார்.

இன ஒருமைக்கு எடுத்துக்காட்டான நாடு

எங்கள் உரையாடலின் இடையே அழகு கொஞ்சும் ஹவாய்த் தீவில் ஹவாய் பூர்வகுடி மக்களோடு அமெரிக்கர்களும் ஜப்பானிய, பிலிப்பைன் மக்களும் அமைதியாகவும் இணக்கமாகவும் வாழ்ந்து வரும் பாங்கைப் பாராட்டினேன். இஃது இன ஒருமைக்கோர் எடுத்துக்காட்டு எனக் கூறினேன். உடனே ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த அப்பெண்மணி இங்கு மூன்று நாட்டு இன மக்கள் ஒருங்கிணைந்து வாழ்வதைப் பாராட்டுகிறீர்கள். இது உங்கள் இந்தியப் பண்பாட்டைக்காட்டுகிறது. ஆனால், நான் இந்தியச் சுற்றுலாவின்போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் செய்தபோது எங்குமே காணமுடியாத மனித நேயத்தையும் ஒருமைப்பாட்டையும் கண்டு அதிசயித்தேன். எத்தனை வகையான இன மக்கள்; எத்தனை வகையான மொழிகள்; நடையுடை, பாவனைகள்; தங்களது சமயச்