பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

இது ‘எஹ்ராம்’ உடை என அழைக்கப்படுகிறது. இறந்தவரின் சடலத்தின் மீது இத்தகு துணியே போர்த்தப்படுகிறது. இறைவனை அடைய அனைத்தையும் துறக்கத் துணியும் செயலையே இது நினைவூட்டுவதாயுள்ளது. ஹஜ்ஜின் போது கஃபா, இறையில்லத்தில் இறைவணக்கத்திற்காகக் குழுமியுள்ள இலட்சக்கணக்கான ஹாஜிகள் தங்கள் நாடு, மொழி, இன, நிற, கலாச்சார வேறுபாடுகளையெல்லாம் மறந்தவர்களாக, நாம் அனைவரும் ஆதாம் (அலை) வழிவந்த சகோதரர்களே; அனைவரும் சமமானவர்களே என்ற உணர்வோடு சமத்துவத்தை - சகோதரத்துவத்தைச் செயல் வடிவில் நிலை நாட்டுகின்றனர்.

மீண்டும் அதே எஹ்ராம் உடையில் துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் நண்பகலுக்குப் பின் மக்காவுக்கு அருகிலுள்ள ‘அரஃபா’ பெரு வெளியில் குழுமுகின்றனர். இங்குதான் ஹஜ் கடமை நிறைவேற்றப்படுகிறது. இறுதித் தீர்ப்பு நாளின்போது ‘மஹ்ஷர்’ மைதானத்தில் மனித குலம் மீண்டும் உயிர்த்து எழுப்பப்படுவதை நினைவு கூர்வதாக இந்நிகழ்வு அமைகிறது.

அது மட்டுமல்ல, ஹாஜிகள் ஒரு பகல் மட்டும் தங்குவதற்காக அமைக்கப்படும் கூடாரங்கள் அன்று மாலையே அகற்றப்படுகின்றன. இஃது இறைவனால் அளிக்கப்பட்ட மனித வாழ்வு எனும் கூடாரம் எந்நேரமும் இறைவனால் பிரிக்கப்படலாம். தங்கள் உடலிலிருந்து உயிர் பிரிக்கப்படலாம் என்ற வாழ்வியல் தத்துவத்தை உணர்த்துவதாயுள்ளது. மறுநாள் மினா எனுமிடத்தில் சைத்தானைக் கல்லால் எறியும் நிகழ்வு நிறைவேற்றப்படுகிறது. ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் இறைவிருப்பத்தை நிறைவேற்ற முனைந்த இப்ராஹிம் (அலை) அவர்களைத் தடுக்க முயன்ற சைத்தானை அவர் கல்லால் அடித்து விரட்டிய செயலை நினைவுகூரும் வகையில் இச் செயல் ஹாஜிகளால் ஏழு