பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

தூதர்களும், இறை வேதங்களும் வந்திருக்கலாம் என்பதில் ஐயமில்லை.

ஏக இறைவனை வணங்கப் பணித்த
இறைதூதர்களே
இறைவனாக்கப்பட்டார்கள்

இந்த இறை தூதர்கள் எல்லோருமே ஏக இறைவனையே வணங்கப் பணித்தார்கள். தங்களை வணங்குமாறு யாருமே கூறவில்லை. ஆனால், நாளடைவில் அந்த இறை தூதரைப் பின்பற்றியோர் அவர் மீது கொண்ட அன்பால் அவருக்கு இறைத்தன்மைகளை ஏற்றி, இறைவனாகவே ஆக்கிவிடுவார்கள். நீண்டகாலத்துக்குப் பின் தடம்புரண்ட மக்களின் வாழ்வை நேர்தடத்துக்குக் கொணர மீண்டும் ஓர் இறைதூதர் தோன்றி, மக்களை வழி நடத்துவார் என்பதுதான் இறை தூதர்களின் வரலாறாக உள்ளது.

இவ்வாறு இறைவனால் வழங்கப்பட்ட இறைச் செய்திகளெல்லாம் ஒரே மாதிரியாக இருந்து வந்துள்ளன என்பது நபிகள் நாயகம் அவர்களுக்கு வழங்கப்பட்ட இறைச்செய்தி பற்றி திருக்குர்ஆன் மூலம் வெளியிடப்பட்ட இறை அறிவிப்பால் உணர முடிகிறது.

“(நபியே) உமக்கு முன் வந்த தூதுவர்களுக்குக் கூறப்பட்டது எதுவோ அதனையேயன்றி (வேறொன்றும்) உமக்குக் கூறப்படவில்லை.” (குர்ஆன் 41:43)

ஐம்பெரும் கடமைகள்
அனைத்துச் சமய அடிப்படை

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளின் அடித்தளம் உலகத்துச் சமயங்கள் அனைத்தின் அடித்தளமாக அமைந்திருப்பது அகிலத்துச் சமயங்கள் அனைத்தும் இறைவனால் அருளப்பட்டவையே என்பதற்குச் சான்றாக உள்ளது.