பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால்) உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலானவர் என்று பாராட்டிக் கொள்வதற்கில்லை. (எனினும்) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக்க கண்ணியவான்.” (குர் ஆன் 49 : 1.3)

ஆதாம் (அலை) ஹவ்வா வழியிலே பிறந்தவர்களின் பிறப்பு எண்ணிக்கை, இன்று அகில உலகிலும் இறந்தோர் போக எஞ்சியோர் ஐந்நூறு கோடிப் பேர்களாகும். இவர்கள் அனைவருமே ஒரே மூலத் தாய் தந்தையர் வழிவந்த சகோதரர்கள்; உடன் பிறப்புகள் என்பதுதான் நபிகள் நாயகம் போதித்த கோட்பாடு. அதுவே திருமறை தரும் கொள்கை.

அனைவரும் சோதரரே

எனவே, உலக மக்கள் அனைவரும் ஒரே குலத்தை, ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதைத் திருமறை பல இடங்களில் வலியுறுத்திக் கூறுகிறது.

பெருமானாரும் இந்தக் கருத்தையே தம் வாழ்நாள் முழுமையும் போதித்து வந்தார். உடன்பிறந்த சகோதரர்கள் என்ற முறையில் சமத்துவமாக வாழ வேண்டியவர்கள் என்பதை எல்லா வகையிலும் வலியுறுத்தி வந்தார்.

பெருமானார் ஒரு சமயம் சில தோழர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அத்தெரு வழியே யூத சமயத்தைச் சார்ந்த யூதர் ஒருவருடைய இறந்த சடலத்தைச் சிலர் தூக்கி வந்தனர். இதைக் கண்ட அண்ணலார், அச்சடலம் தன்னைக் கடந்து செல்லும்வரை