பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

எழுந்து நின்று மரியாதை செய்தார். அவரது தோழர்களும் அவ்வாறே எழுந்து நின்று மரியாதை செய்தனர். பிண ஊர்வலம் சென்ற பின்னர் அமர்ந்தனர். அப்போது வியப்புடன் அவரது தோழர்கள் அண்ணலாரை நோக்கி, “இவ்வாறு எழுந்து நின்று மரியாதை செய்ததற்கு ஏதாவது சிறப்புக் காரணம் உண்டா?” என வினவினர். அதற்குப் பெருமானார் புன்னகை புரிந்தாவாறு, “அவரும் நம் சகோதரரே, ஒரு சகோதரன் மற்றொரு சகோதரனுக்குச் செய்யும் மரியாதையைச் செய்தேன்” என்று கூறி தோழர் தம் ஐயம் போக்கினார்.

இறந்தவர் மாற்றுச் சமயத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்திருந்தும், அவரும் ஆதாம் (அலை) வழி வந்த தம் சகோதரரே எனக் கொண்டு, அவரது இறுதிப் பயணத்திற்கு எழுந்து நின்று மரியாதை செய்த மாநபியின் செயல் ஒவ்வொருவரும் பின்பற்றி ஒழுகத்தக்க வழிமுறையாகும்.

மனிதனின் சிறப்பு குலத்தாலும்
கோத்திரத்தாலும் இல்லை

தான் பிறந்த குலத்தின் காரணமாகவோ, தான் சார்ந்த இனத்தின் பேராலோ, தான் பேசும் மொழியின் காரணமாகவோ, பிறந்த நாட்டினாலோ, தான் பெற்ற கல்வியினாலோ ஒருவன் உயர்வு பாராட்டினால், அல்லது பேதம் காட்டினால் அது சாத்தானின் செயலாக இருக்குமே தவிர இறையம்சமான மனிதனின் செயலாக இருக்க முடியாது என்பது பெருமானாரின் உள்கிடக்கையாகும்.

அதே சமயத்தில் மனிதனுக்கு என்று ஓர் உயர்வுத் தன்மை உண்டு. ஒரு மனிதன் எந்த அளவுக்குத் தன்னை யொத்த மனிதர்களை நடத்துகிறான்; ஒழுக்க நியதிகளைப் பேணி நடக்கிறான்; மனிதர் என்ற அளவில் மற்றவருடைய உயிர், பொருள்களை கண்ணியப்படுத்துகிறான்; அவர் பின்பற்றும் சமயத்தை மதிக்கிறான்; எந்த அளவுக்கு இறை