பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

நன்மை தீமையைப் பிரித்தறியக்கூடியதாகவும் உள்ள திருக்குர்ஆன் (என்னும் இம்மறை) அருளப்பெற்றது. ஆகவே, உங்களில் எவர் இம்மாதத்தை அடைகிறாரோ, அவர் நோன்பு நோற்கவும்” (2-185) எனக் கூறப்பட்டுள்ளது.

‘ரமளான்’ என்ற சொல்லுக்கு ‘சுட்டெரித்தல்’ என்பது பொருளாகும். இம்மாதம் முழுவதும் நோன்பு நோற்றும் ‘தராவீஹ்’ என்னும் கூட்டுத் தொழுகை மூலம் மிக அதிகமாக இறைவணக்கம் புரிந்தும், தாங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களையெல்லாம் சுட்டெரிப்பதால் இம்மாதம் ரமளான் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

வேதங்களின் மாதம்

நபிகள் நாயகம் (சல்) அவர்களுக்கு ‘ஜிப்ரீல்’ எனும் வானவர் மூலம் முதல் இறைச் செய்தி இம்மாதத்தின் இருபத்தியேழாம் நாளன்றுதான் இறைவனால் அருளப்பட்டது. அந்த நாள் லைலத்துல் கத்ர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த அரபுச் சொல்லுக்குக் ‘கண்ணியமான இரவு’ என்பது பொருளாகும்.

இறைமறையாகிய திருக்குர்ஆன் மட்டுமல்லாது வேறு பல வேதங்களும் நபிமார்களாகிய இறைத்தூதர்கள் மூலம் இறைவன் உலகுக்கு வழங்கியதும் இதே ரமளான் மாதத்தில்தான்.

‘ஏப்ரஹாம்’ என அழைக்கப்படும் இபுராஹீம் நபி அவர்கட்கு சுஹ்பு எனும் வேதம் இதே ரமளான் மாதத்திலேதான் அருளப்பட்டது. அதன்பின் எழுநூறு ஆண்டுகள் கழித்து மோசஸ் எனும் மூஸா நபி அவர்கட்கு தெளராத் எனும் வேதம் இதே ரமளான் ஆறாம் நாளிலே தான் இறைவனால் வழங்கப்பட்டது. அதற்கும் ஐநூறு ஆண்டுகள் கழித்து ‘டேவிட்’ எனும் தாவூது நபி அவர்கட்கு