பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

மனத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமே பசியைக் கட்டுப்படுத்த முடியும். பசியைக் கட்டுப்படுத்தும் ஒருவனுக்குப் பிற இச்சைகளையும் விருப்பு வெறுப்புகளையும் கட்டுப்படுத்துவது கடினமான காரியமல்ல.

நோன்பு நோற்கும் காலத்தில் தீய செயல்களைத் செய்யாதிருத்தலோ அல்லது அவற்றை விட்டு நீங்கி யிருத்தலோ மட்டும் முக்கியமன்று. தீய உணர்வுகளே நெஞ்சத்தில் முளைவிடாது தடுக்கும் வகையில் மனத்தின்மை பெற வழி வகுப்பதே நோன்பு நோற்பதன் முக்கிய நோக்கமாகும்.

பகலெல்லாம் அருஞ்சுவை உணவும் சுவைமிகு பானமும் பருகி இன்பமாக வாழும் முஸ்லிம், ரமளான் நோன்பு நாட்களில் இவைகளை அறவே ஒதுக்கி பசியுணர்வும் தாக வேட்கையுமிக்க கடினமான தவ வாழ்வை விரும்பி மேற் கொள்கிறார். இதன் மூலம் தன் உல்லாச வாழ்வுக்கு மாறாகச் சிக்கன உணர்வாளராக மாறுகிறார். மனிதன் உண்பதற்கென இறைவன் அனுமதித் துள்ள உணவு வகைகளையே நோன்பின்போது மனிதனால் விலக்கி வைக்க முடிகிறதென்றால், அவனால் எத்தகைய தீங்கையும் விலக்கி வைக்கவும் பெறுத்தொதுக்கவும், மனம் வலுப் பெற இயலவே செய்யும். எனவே, மனிதன், தன்னைத் தானே அடக்கியாள நோன்பு வழியமைத்து தருகிறதெனலாம்.

ஈகையுணர்வளிக்கும் நோன்பு

ஒரு மாத கால நோன்பின்போது பசித்துன்பம் எத்தகையது; தாகத்துடிப்பு எப்படிப்பட்டது என்பதையெல்லாம் அனுபவித்து உணரும்போது, பசியாலும் தாகத்தாலும் வருந்தும் ஏழை எளியவர்கள் மீது அன்பும், பரிவும் ஏற்படுவது இயல்பேயாகும். எனவே, இத்தகைய