பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தியாகத்திற்கோர் திருநாள்


“ஈதுல் அள்ஹா” பெருநாள் உலகெங்கும் வாழும் முஸ்லிம் பெருமக்களால் தியாகத் திருநாளாக நினைவு கூறப்படுகிறது.

தனக்கென வாழாது
பிறர்க்கென
வாழும் பெற்றியர்

மனிதப் பண்புகளிலேயே மகத்தானது தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் தகைசால் பண்பேயாகும். இதுவே மனிதனைப் புனிதனாக மாற்றும் பேரருட் பண்பாகும். இதற்க அடித்தளமாக அமைய வேண்டியது தியாக உணர்வாகும். தன்னொத்த மனிதர்களுக்காக அவர்தம் உயர்வுக்காக மற்றொரு மனிதன் தியாகம் செய்ய முனைவது கடமையாகும் என்பது ஆன்றோர் வாக்கு. மனிதனுக்கு மனிதன் இத்தகைய கடப்பாடுடையவன் எனும் போது தன்னைப் படைத்த இறைவனுக்காக மனிதன் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்வதைத் தன் உயிர்ப் பண்பாகக் கொண்டிருத்தல் வேண்டும் என்பதை நினைவுறுத்தும் நாளாக அமைந்திருப்பதே ‘ஈதுல் அள்ஹா’ எனும் தியாகத் திருநாள்.