பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

மனித மனம் அசை போடும் வகையில் அமைந்ததே ஐநேரத் தொழுகைகள்.

அதிகாலை ஐந்து மணிமுதல் இரவு எட்டரை மணிவரை குறிப்பிட்ட இடைவெளிகளில் ஐந்து முறை நிறைவேற்றப்படும் தொழுகை முறைகள் தியாக உணர்வின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. இன்பமான அதிகாலைத் தூக்கத்தைத் தியாகம் செய்து இறைவணக்கத்தில் ஈடுபடுகிறான். ஐந்நேரத் தொழுகையின்போது தனக்குப் பொருட்பயன் தரும் உலக நடவடிக்கைகளிலிருந்து முற்றாக ஒதுங்கி அருட்பயன் பெற இறைச் சிந்தனை ஒன்றை மட்டுமே பற்றுக் கோடாகக் கொண்டு இறை வணக்கம் புரிகிறான். இதன் மூலம் இறைவனுக்காக நேரத்தையும் பொருள் வேட்கையையும் தியாகம் செய்யும் மன உணர்வு அவனுள்ளே அழுத்தம் பெறுகிறது.

மூன்றாவது கடமையான நோன்பை மேற்கொள்ளும் ஒவ்வொரு முஸ்லிமும் முப்பது நாட்கள் தொடர்ந்து பகலில் உண்ணாமலும் பருகாமலும் நோன்பு நோற்கிறார்கள். தான் வழக்கமாகப் பகலில் துய்த்துவந்த இன்ப மூட்டும் பழக்கவழக்கங்கள் அனைத்தையும் முற்றாகத் துறந்து விடுகிறான்.

அவ்வாறே நான்காவதான ஜகாத் கடமையும் அமைந்துள்ளது. பொருள் வேட்கையோடு தான் உழைத்துத் தேடிய பொருளில் நாற்பதில் ஒரு பங்கை அதாவது இரண்டரை சதவீதத்தை இஸ்லாம் விதித்துள்ள நியதிப்படி ஏழை எளியோர்க்கு வழங்குகிறான். தான் தேடிய பொருளோடு எவ்வித தொடர்புமில்லா அன்னியர்க்கு தன் கைப்பட உவக்கும் உள்ளத்தோடு இரண்டரை சதவீதச் சொத் தைப் பகிர்ந்தளிக்கும் ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளமும் தியாக வேட்கையின் ஊற்றுக் கண்களாக உருவெடுக்கின்றன.