பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

இதுவே, இறைவனின் தூதர்களும் நல்லடியார்களும் தொன்று தொட்டு பின்பற்றி வந்த உண்மையாகும். ஆதலால் மனிதன் இவ்வுலக வாழ்க்கையில் தீயனவற்றைக் களைந்து, நல்லனவற்றைப் பின்பற்றக் கடமைப் பட்டுள்ளான். எவை நல்லவை, எவை தீயவை என்பதை இறைவனின் திருமறையிலிருந்தும், திருத்தூதர்களின் வழிமுறைகளிலிருந்தும் அறியப் பெறலாம். மனிதன் இவ்வுலகில் செய்த நல்ல-தீய நடத்தைகளைப் பற்றித் தீர்ப்பு அளிப்பதற்காக, இறைவன் ஒரு நாளினை நிர்ணயித்துள்ளான். அந்த நாளில் இவ்வுலகங்கள் எல்லாம் அழியப் பெற்று, மனிதர்கள் எல்லோரும் மறுபடியும் உயிர்ப்பிக்கப்படுவர். பிறகு ஒவ்வொருவரின் நடத்தையும் நல்லவை - தீயவை அடிப்படையில் கணக்கிட்டும் எடையிட்டும் இறைவன் தன் தீர்ப்பினை அளிப்பான். அந்தத் தீர்ப்பில் தேறியவர்கள் என்றும் நிலைத்திருக்கக்கூடிய, இன்பகரமான, சொர்க்க வாழ்வினை அடையப் பெறுவர். ஆனால், அந்தத் தீர்ப்பில் தோல்வியுற்றவர்கள் என்றும் வேதனையே தரக்கூடிய நரகத்தில் இடப்படுவர். அந்த மாபெரும் இறுதித் தீர்ப்பு நாள், முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள், வெள்ளிக்கிழமையன்று ஏற்படும் என இறைத் தூதர் நபி பெருமானார் அவர்கள் மொழிந்திருப்பது முஹர்ரம் மாதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது.

எண்ணிக்கைக்காக மட்டுமல்ல
எண்ணத்தையும் வளர்க்க

இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ரி கணக்கு சந்திரப் பெயர்ச்சியை ஆதாரமாகக் கொண்டு கணிக்கப்படுவதாகும்.

கிருஸ்தவ ஆண்டுக் கணக்குச் சூரியனை அடித்தளமாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.