பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

பணித்தார்கள். அன்று முதல் முஹர்ரம் 10ஆம் நாள் உலக முஸ்லிம்கள் அனைவராலும் ஆஸூரா நோன்பு கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.

சிறப்பு நோன்பு நாள்

ரமளான் நோன்பிற்கு அடுத்தபடியாக சிறப்புமிகு நோன்பாக ஆஸூரா நோன்பு கருதப்படுகிறது. யூதர்கள் ஆஸூரா தினத்தன்று மட்டுமே நோன்பு இருப்பார்கள். ஆனால், பெருமானார் பணித்தபடி ஆஸூராவிற்கு முதல் நாளான முஹர்ரம் 9-ம் நாளோ ஆஸூராவிற்கு அடுத்த நாளான முஹர்ரம் 11-வது நாளோ ஆஸூரா நோன்போடு இணைத்து நோற்க வேண்டும் எனப் பெருமானார் அவர்கள் பணித்துள்ளார்கள். இவ்வாறு ஒரு நாள் அதிகமாக ஆஸூரா நோன்பு நோற்பது ஓராண்டு முழுவதும் நோன்பு நோற்பதற்குச் சமமாகும். அத்துடன் நோன்பு நோற்பவரது ஓராண்டுப் பாவத்திற்குப் பரிகாரம் ஆகும் என்றும் கூறியுள்ளார்கள். இவ்வாறு பெருமானார் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் கூறிய நடைமுறையைப் பின்பற்றி ஒழுகுவது ‘சுன்னத்’ எனும் தகுதியைப் பெறுகிறது.

‘ஆஸூரா நாளின்போது நோன்பு நோற்பது, அன்று ஏழை எளிய மக்களுக்குத் தருமம் தருவது, அனாதைகளான எத்தீம்களை அன்போடு அரவணைத்து அவர்களை மகிழ்ச்சிப் படுத்துவது, மார்க்க ஞானம் மிக்க அறிஞர் பெருமக்களை நாடிச் சென்று காண்பது, தன் குடும்பத்தினருக்காகவும் தன்னைச் சார்ந்தவர்களுக்காகவும் தாராளமாகப் பணம் செலவு செய்வது, அதிகப்படியான நஃபில் தொழுகைகளை இந்நாட்களில் தொழுவது இறையருளை மழையெனப் பெறுவதற்கு வழிகோலும் என்பது பெரியோர் வாக்கு.