பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

முஸ்லிம் குடும்பம் ஒவ்வொன்றும் ஏற்றுக் கொள்ள வேணடும் என்றும் அவ்வாறு இணைந்த இரு குடும்பத்தவர்களும் ஒன்றாக உழைத்துப் பெருளீட்டிச் சமமாகப் பகிர்ந்து ஒத்திணங்கி ஒரே குடும்பமாக வாழ வேண்டும் எனவும் யோசனை கூறினார். ஆக்கப்பூர்வமான இவ்வாலோசனையை ஏற்ற மதினா முஸ்லிம் குடும்பத் தலைவர்கள் முழுமனதுடன் முஸ்லிம் அகதிகளை விரும்பி ஏற்றனர். இதன் மூலம் அகதிக் குடும்பத்தவர்க்கு இருப்பிடமும் வேலை வாய்ப்பும் உடனடியாகக் கிடைத்தது. மனிதநேய அடிப்படையில் சகிப்புணர்வும் புரிந்துணர்வும் கொண்ட சூழ்நிலையில் மலைப்பூட்டும் மாபெரும் அகதிப் பிரச்சினை எளிதாகத் தீர்க்கப்பட்டது.

பல்வேறு சமயங்களுக்கிடையே
உருவான ஒருங்கிணைப்பு

பெருமானார் மதினா நகர் வந்து சேர்ந்தபோது அங்கு பல்வேறு சமயங்களைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுள்ளும் கிறிஸ்துவ, யூத சமய மக்கள் பெருமளவில் வாழ்ந்தனர். அவர்களுக்கிடையே எவ்வித ஒற்றுமை உணர்வும் இல்லை. ஒரே இனத்தைச் சார்ந்த இரு வேறு கூட்டத்தால் அற்பக் காரியங்களுக்காக முடிவில்லாத சண்டையிலும் சச்சரவிலும் ஈடுபடுவது அவர்தம் வழக்கமாகவே இருந்து வந்தது. இதற்கிடையில் வெளியார்களின் தாக்குதலும் அடிக்கடி நிகழ்ந்தது. இதனால் கடுமையான உயிர்ச்சேதமும் பொருட் சேதமும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருந்து வந்தது. இக்காரணங்களால் எல்லா வகையிலும் மதினா நகர் மக்கள் ஒற்றுமையுணர்வற்றவர்களாகவும் சகிப்புணர்வில்லாதவர்களாகவும் பிளவுண்டு கிடந்தனர். இவர்களை ஒருங்கிணைக்கும் ஒட்டு மொத்தத் தலைமை ஏதும் அந்நாளில் அப்போது மதினாவில் உருவாகியிருக்கவில்லை.