பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

நடு நாயக நோன்பு

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பு நான்காவது கடமையாக அமைந்திருந்த போதிலும் ரமளான் மாதத்தில் இக்கடமை நடுநயாகமாகப் போற்றப்பட்டுக் கடைப்பிடிக்கப்படுகிறது. நோன்புப் பெரு நாளாகவே போற்றப்படுகிறது.

ஏன் ரமளானில் நோன்பு?

இஸ்லாமிய மாதங்கள் பன்னிரண்டில் கட்டாயக் கடமையாக நோன்பு நோற்கும் மாதமாக ரமளான் மாதம் மட்டும் அமையக் காரணம் என்ன? இதற்கு இஸ்லாமியத் திருமறையாகிய திருக்குர்ஆனே விடையளிக்கிறது.

“ரமளான் மாதம் எத்தகைய (மகத்துவமுடையதென்றால், அதில் தான், மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேரான வழியைத் தெளிவாக்கக் கூடியதாகவும், நன்மை தீமையைப் பிரித்தறிவிக்கக் கூடியதாகவும் உள்ள திருக்குர்ஆன் (என்னும் இவ்வேதம்) அருளப்பெற்றது. ஆகவே, உங்களில் எவர் இம்மாதத்தை அடைகிறாரோ அவர் இம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும் (2:185).

இதிலிருந்து ரமளான் மாதம் முழுமையும் நோன்பு நோற்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இஸ்லாம் விதித்துள்ள கட்டாயக் கடமை (பர்ளு) ஆகிறது.

சமயந்தோறும் விரதமெனும் நோன்பு

உலகிலுள்ள அனைத்துப் பெரும் சமயங்களும் விரதமாகிய நோன்பைக் கடமையாக்கியுள்ளன. இந்து சமயம் அடிக்கடி விரதமிருக்கப் பணிக்கிறது. எனினும், இஸ்லாமிய நோன்புக்கும் பிற சமய விரதங்களுக்குமிடையே வேறுபாடு உண்டு. மற்ற சமயங்கள் விதித்துள்ள