பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

உதவியை இறைவன் நாட வேண்டிய அவசியமில்லை. அல்லாஹ் கொடுப்பவனே தவிர பெறுபவன் அல்ல.

அப்படியென்றால், நோன்புக் கடமையை நிறைவேற்றுவதால் நிலையான பயன் பெறுபவர் யார்? நாம் தான். இறைவன் பெயரால் விளையும் நன்மை அனைத்தும் நமக்கே உண்டாகிறது. தீமையினின்றும் முற்றாக விலகவும் நன்மையை நாடவும்; பொறுமை, அன்பு, கருணை ஆகியவற்றின் வடிவாக மாறவும் நமக்கு வாய்ப்பளிக்கின்றது. இத்தகைய நற்பண்புகளால் சூழப்பட்டு மனத்துய்மை பெற்ற நம்மையே இறைவன் நேசிக்கிறான். அல்லாஹ்வின் அன்பை பெறும் தகுதியை ரமளான் மாத நோன்பு நமக்கு எளிதாகத் தேடித் தருகிறது. இவ்வாறு இறைவன் பெயரால் நோற்கும் நோன்புப் பலன் முழுமையும் நம்மையே சேர்கின்றன. இதையே இறைவன் தன் திருமறையில்,

“நீங்கள் நோன்பு நோற்பது உங்களுக்கே நன்மை (என்பதை) நீங்கள் அறிவுடையோர்களாயிருந்தால் (தெரிந்து கொள்வீர்கள்)” (2:184) எனக் கூறித் தெளிவுபடுத்துகிறது.

நோன்பு தரும் இறை நெருக்கம்

இறையருளைத் தேடித் தருவது மட்டுமல்லாது இறைவனோடு நம்மை நெருக்கமடையச் செய்யும் சாதன மாகவும் நோன்பு அமைந்துள்ளது. நமக்கு மட்டுமல்ல, இறை தூதர்களுக்கேகூட நோன்பு இறை நெருக்கத்திற்கான படிக்கட்டுகளாக அமைந்துள்ளன என்பதைத் திருமறை எடுத்துக்காட்டுகிறது.

இறை தூதர்கள் இறைச் செய்தியைப் பெறுமுன் தங்களை உள்ளும் புறமும் தூய்மைப்படுத்தும் ஒப்பற்ற வழிமுறையாக நோன்புக் கடமையை மேற்கொண்டே