பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83

தங்களைப் பரிபக்குவப்படுத்திக் கொண்டார்கள் என்பது இறைமறை தரும் வரலாறு. ஏசுநாதராகிய ஈசா நபி நாற்பது நாட்கள் நோன்பு நோற்ற பின்பே இறை ஞானம் பெற முடிந்தது. மோசஸ் எனும் மூஸா நபியும் நோன்புக் கடமையை நிறைவேற்றிய பின்னரே இறைவனைக் காணும் பேறு பெற முடிந்தது. இதேபோன்று, 27 நாட்கள் இரவு பகலாக நோன்பு நோற்ற பின்பே ஹிரா மலைக் குகையில் முதன் முதலாக இறைச் செய்தியை நபிகள் நாயகம் முஹம்மது (சல்) அவர்கள் வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) வாயிலாகப் பெற முடிந்தது. இவ்வாறு இம்மைக்கும் மறுமைக்கும் பெரும்பேற்றை நல்கவல்ல ஆற்றல்மிகு சாதனமாக அமைந்திருப்பது நோன்பாகும். இதைப்பற்றி திருமறை, விசுவாசிகளே. உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்து பிரகாரமே உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதிக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்) நீங்கள் பரிசுத்தமுடையவர்களாகலாம் (2:183) எனக் கூறுகிறது.

உலகமே ஜமாத்தாகும் விந்தை

இத்தகு சிறப்புமிகு நோன்பை உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் ரமளான் மாதம் முழுவதும் ஏக காலத்தில் நோற்கிறார்கள். இதனால் இம்மாதம் புனிதமிகு மாதமாகிறது. இம்மாதம் முழுவதும் முஸ்லிம்கள் அதிக அளவில் ஜகாத் போன்ற கடமைகளை முனைப்பாக நிறைவேற்றுவதன் மூலம் ஒருவருக்கொருவர் உதவுகின்றனர். ஆன்மிக உணர்வுடன் பொருள் பரிமாற்றமும் செய்துகொள்கின்றனர். அவர்கள் அனைவரிடமிருந்து தீய யுணர்வுகள் நீங்குகின்றன. நல்லுணர்வுகள் மேலோங்குகின்றன. தாங்கள் தேடிய செல்வத்தை ஜகாத் போன்றவை கட்காக இறைவழியில் செலவிட்டு மகிழ்கின்றனர். சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் நிலைநாட்டுகின்றனர். உலகெங்கும் நோன்பு நோற்கும் நோம்பாளிகள்