பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85

நோன்பின் முழு முதற்பயனே மனக் கட்டுப்பாடு என்பது புலனாகிறது.

பொறுமையின் உறைவிடம் நோன்பு

மனக் கட்டுப்பாட்டுடன் அளவுக்கதிகமான பொறுமையைப் பெறும் பயிற்சிக்களமாகவும் நோன்பு அமைகிறது.

ரமளான் மாதம் முழுமையும் நோன்பு நோற்கும் ஒருவர் பசியை மட்டுமா பொறுக்கிறார். தன் தவறான பழக்க வழக்கங்கள் அத்தனையினின்றும் விடுபட்டவராக, தனக்கேற்படும் வசதிக்குறைவுகளையெல்லாம் பொறுத்து, நல்லுணர்வு, நற்சிந்தனை, நல்லிணக்கம் ஆகிய பண்பு நலன்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்து வாழ்வதன் மூலம் எல்லா வகையிலும் பொறுமையின் உறைவிடமாகிறார்.

நோன்பாளி வழக்கமாக உண்ணும் பருகும் நேரங்கள் முற்றாக மாறுவதால் அவர் எவ்வித மன எரிச்சலுக்கும் ஆளாவதில்லை. தான் இன்பமாக உறங்கி மகிழும் முன்னிரவிலும் பின்னிரவு வைகறையிலும் விழித்திருக்க நேர்வதற்காக அவர் வருந்துவதில்லை. அவற்றையெல்லாம் அவர் அளவுக்கதிகமான பொறுமையோடும் சகிப்புணர்வோடும் மேற்கொள்கிறார். தான் ஒரு பொறுமைமிக்க இறையடியான் என்ற நல்லுணர்வு அவன் நெஞ்சமெல்லாம் பரவி அவரைப் பரவசப்படுத்துகிறது.

புலனடக்கத்திற்கு அடிப்படை

பொறுமையும் மனக்கட்டுப்பாடும் தன் புலனடக்கத்திற்கு அடிப்படை, மனதைக் கட்டுப்படுத்தத் தெரிந்த வருக்கு பசி, தாகம் மட்டுமா, எதையுமே கட்டுப்படுத்தும் வலிமை இயல்பாக ஏற்பட்டு விடுகிறது. இதன் மூலம் மன இச்சைகளை, ஆசைகளை, விருப்பு, வெறுப்புகளைத் தம் விருப்பம்போல் கட்டுப்படுத்தும் உணர்வு வலுப்பட்டு