பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87

கனிவான பார்வையைச் செலுத்த வேண்டிய இன்றியமைச் சூழ் நிலை அவனைச் சுற்றி உருவாகி விடுகிறது. இதன் மூலம் கட்புலனும் நோன்பாளியின் ஆளுகைக்குட்பட்டதாகிறது.

ரமளான் மாதத்தில் ஐவேளைத் தொழுகையோடு ‘தராவீஹ்’ போன்ற சிறப்புத் தொழுகைகளையும் மேற் கொள்வதால் மிக அதிக அளவில் இறை வணக்கங்களைச் செய்ய வேண்டிய இன்றியமையாக் கடப்பாடு நோன் பாளிக்கு ஏற்படுகிறது. இதனால் இறைமறையின் ஒலிகளே இடையறாது நோன்பாளியின் செவிகளை நிறைக்கின்றன. மனத்தை கிலேசப்படுத்தும் எந்தவொரு தவறான வார்த்தையும் தன் காதில்பட்டு விடாமல் நோன்பாளி கவனித்துக் கொள்கிறான். இதனால், செவிப்புலனும் அடக்கத்தோடு செயல்பட வேண்டியதாகிறது.

நோன்புச் சமயத்தில் ஆண்-பெண் உடலுறவு அறவே தடுக்கப்படுகிறது. பாலுணர்வு தலைதூக்கும் பார்வையோ படிப்போ அறவே கூடாது என விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்களைத் தழுவுவது முற்றாக விலக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தவறான தொடுவுணர்வுக்கு வாய்ப்பே இல்லாமற் போவதால் தொடுவுணர்வுப் புலனும் நம் கட்டுப்பாட்டிற்குட்பட்டதாகிறது.

இவ்வாறு வாய், மூக்கு, கண், காது, தொடுவுணர்வு ஆகிய ஐந்து ஐம்புலன்களையும் தீமையின் சுவடுகூடப் படியாவண்ணம் நற்செயல்களின்பால் மட்டும் திருப்பி இறையருள் பெறும் பக்குவத்தை நோன்பாளி பெற வழியேற்படுகிறது. இதன் மூலம் ஐம்புலன்களின் இன்ப வேட்கை அறவே தடுக்கப்படுகிறது.

‘அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும்’ வேண்டாதவற்றை என்ற மூதுரைக்கு இலக்கணமாக