பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

குருமார்களும், தங்களையே கடவுளர்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்ட மன்னர்களும் எண்ணற்ற இன்னல்களை விளைவித்தபோதிலும் மனந்தளராது நாடோடியாய் திரிந்து எண்பது வயதுவரை சமய எழுச்சிப் பிரச்சாரம் செய்து வந்தார் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள்.

தியாகத்தின் எல்லைக்
கோடான நிகழ்ச்சி

தன் ‘ஓர் இறை’ பிரச்சார இயக்கத்தைத் தொடர்ந்து நடத்த வாரிசு இல்லையே என ஏங்கி இறைவனிடம் மன்றாட, முதுமையின் எல்லைக் கோட்டில் வாழ்ந்த இபுறாஹீம் (அலை) அவர்கட்குப் புதல்வராகப் பிறந்து பிள்ளைப் பிராயமடைந்தார் இஸ்மாயீல். தன் கையாலேயே தன் புதல்வன் இஸ்மாயிலை அறுத்துப் பலியிடுவது போல் தொடர்கனவு கண்ட தந்தை இபுறாஹீம் (அலை) அதை இறைவனிட்ட கட்டளையாகவே கருதினார். இக் கனவைக் கேட்ட தாயும் மைந்தனும் கூட மனங் கலங்காது அதை இறை கட்டளையாகவே ஏற்றனர். இறை நாட்டத்திற்கொப்ப, தந்தை தன்னைப் பலியிடும்போது, தான் பொறுமையாக இருப்பதாக வாக்குறுதி தந்தார் குமாரர் இஸ்மாயீல். கருணை வடிவான இறைவன், தந்தையே மகனைப் பலியிடும்படி ஆணையிட்டதாகக் கருதி செயல்படலானார்.

இவ்வாறு இறைவனுக்காக இன்னுயிரைத் தியாகம் செய்ய முனைந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இறை தியாக உணர்வை நெஞ்சிலிருத்தும் வண்ணம் உலகெங்கும் உள்ள 125 கோடி முஸ்லிம்கள் ‘ஈதுல் அள்ஹா’ எனும் தியாகத் திருநாளை கொண்டாடி மகிழ்கின்றனர்.

உலகின் முதல்
இறை வணக்கத் தலம்

இபுராஹீம் நபியும் அவர் குமாரர் இஸ்மாயீல் நபியும்