பக்கம்:பெற்றோர் கொடுத்த பெருங்கொடை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

அந்த வாலைச் சுழற்றுவதால் அதற்கு முன்னால் நகர முடிகிறது. இப்படி நகரும்போது வழியிலேயே பல நசித்துப்போகின்றன. ஒரு சிலதான் கருமூலக் குழாய் வரை செல்லும். அவற்றிலும் சாதாரணமாக ஒன்று தான் அண்டத்தோடு கலந்து கருவுண்டாகக் காரணமாகிறது. கருமூலக்குழாயை அடைந்த விந்தணுக்களுக்குச் சுமார் ஒரு வாரம் வரையிலும் இந்தச் சக்தி இருக்கிறது. அதற்குள் கருமூலத்துடன் கலக்க முடியாவிட்டால் அவை பயனற்றுப் போய்விடுகின்றன.

அண்டம் சூல் பைகளில் உண்டாகிறது. இரண்டு சூல்பைகள் பெண்களின் உடம்பில் இருக்கின்றன. ஒரு மாதத்தில் ஒரு சூல் பையிலும் அடுத்த மாதத்தில் மற்றொரு சூல் பையிலுமாக மாறிமாறி மாதம் ஒன்று வெளிப்படுகிறது. அது கருமூலக்குழாயில் மூன்று நாட்கள் வரை உயிருடன் இருக்கும். அதற்குள் ஒரு விந்தணுவைச் சந்தித்தால் கருவாகிறது. இல்லாவிடில் நசித்துக் கருப்பை வழியாக வெளியே வந்துவிடுகிறது. அண்டம் சிறியதாயினும் கண்ணுக்குத் தெரியக்கூடிய அளவுள்ளது; ஆனால் விந்தணுக்கள் கண்ணுக்குத் தெரியா. அவை அண்டத்தைத் தேடி வருகின்றன. அவைகளில் ஏதாவதொன்று அண்டத்தை அணுகினால் உடனே அதற்குள் பாய்கிறது. அப்போது அதனுடைய வால் அறுபட்டுத் தலைப்பாகம் மட்டும் உட்செல்லுகிறது.