பக்கம்:பெற்றோர் கொடுத்த பெருங்கொடை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

ஒரு ஜோடிநிறக்கோல்களில் ஒவ்வொன்றிலும் ஒன்று வீதம் மொத்தமாக இரண்டு இருக்குமென்று நாம் அறியலாம். வெள்ளை நிறத்துக்குக் காரணமான ஜீனை வெ என்ற எழுத்தால் சுருக்கமாகக் குறிப்பிட்டால் அவை இரண்டையும் வெ வெ என்று எழுதிக் காட்டலாம். இதே மாதிரி சுயச் சிவப்புப் பூப் பூக்கும் அந்தி மல்லிகையில் உள்ள நிற ஜீன்களை சிசி என்று எழுதிக் காட்டலாம். கலப்பினச் சேர்க்கையில் அவை எவ்வாறு அமைகின்றன என்று இனிக் கவனிப்போம்.

விந்தணுவும் அண்டமும் முதிர்ச்சி அடைந்து கருவுண்டாவதற்குத் தகுதியடைகின்ற காலத்தில் அவைகள் ஒவ்வொன்றிலும் முதிர்ச்சி பெறாத அணுவிலிருந்த நிறக்கோல்களில் பாதிதான் இருக்கும். அந்தப் பாதியானது ஒவ்வொரு ஜோடியிலிருந்தும் ஒவ்வொன்றாக வந்து அமைந்தது. ஆதலால், அந்தி மல்லிகையின் உயிரணுவில் வெள்ளை அல்லது சிவப்பு நிறத்துக்கான ஜீன் எது இருந்தாலும் முதிர்ச்சிபெற்ற விந்தணுவிலோ அல்லது அண்டத்திலோ ஒவ்வொன்றுதான் இருக்கும். அவை சேரும்போது வெண்சிவப்பு நிறம் ஏற்படுகிறது. இதை மூன்றாவது படம் நன்கு காட்டுகிறது.

வெண் சிவப்புப் பூவுள்ள அந்தி மல்லிகையின் நிறக்கோல்களில் ஒரே உறுவமுள்ள ஒரு ஜோடியில் பழையபடி நிறத்துக்கான ஜீன்கள் இரண்டு இருக்கும்.