பக்கம்:பெற்றோர் கொடுத்த பெருங்கொடை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

கொள்ளுவோம். அவற்றில் கருமைக்கும் வெண்மைக்கும் காரணமான நிறக்கோல்களைக் கவெ என்று குறிப்பிடுவோம். இந்த அணுக்கள் முதிர்ச்சி அடையும் போது முன்பே கூறியபடி இரண்டிரண்டாகப் பிரிகின்றன. நிறக்கோல்கள் ஒவ்வொன்றும் இரண்டாகப் பிரிவுபடாமல் பாதி ஓர் அணுவுக்கும் மற்றப் பாதி மற்றதற்கும் செல்கின்றன. இவ்வாறு உண்டான அணுக்கள் கலக்கக் கூடிய விதத்தைப் படம் காண்பிக்கிறது. இரண்டாம் கலப்பினச் சேர்க்கையால் பிறக்கும் நான்கு குட்டிகளில் ஒன்றின் நிறக்கோல்களில் கருமை நிறத்துக்குரிய ஜீன்களே (கக) உள்ளன. வேறு இரண்டில் கருமை. வெண்மை இரண்டுக்குமுரிய ஜீன்கள் (கவெ, கவெ) இருக்கின்றன. ஆனால் கருமை நிறம் ஓங்கி நிற்பதால் இந்த இரண்டு குட்டிகளும் முதல் குட்டி போலக் கறுப்பாகவே இருக்கும். நான்காவது குட்டியின் நிறக்கோல்களில் வெண்மை நிற ஜீன்களே (வெவெ) இருப்பதால் அதுமட்டும் வெள்ளையாக இருக்கும். இவ்விதமாக அந்த வெண்மை நிறம் இரண்டாவது கலப்பினச் சேர்க்கையின் போது தோன்றுகிறது.

நிறத்துக்குக் காரணமான ஜீன்களில் சில எப்படி ஓங்கி நிற்கின்றனவோ அதுபோலவே இன்னும் வேறுவேறான பல தன்மைகளுக்கான ஜீன்களிலும் ஓங்கி நிற்கும் சக்தி உடையவை உண்டு.