பக்கம்:பேசும் ஓவியங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தயிர் கொண்டு வந்த தையல்


முளிதயிரைக் கையிலேந்தி
முகத்தினிலே முறுவலேந்திக்
களிப்புடனே பெண்ணரசி வந்திட்டாள் - அவள்
காதல் பாடல் விழிகளிலே தந்திட்டாள்!
கிளியளகுச் செவ்விதழ்கள்
கேண்மைமிகு சொல்மிழற்றி
உளிபடாத சிற்பமவள் வந்திட்டாள் - அவள்
ஒப்பிலாத காதலன்பைத் தந்திட்டாள்!

வானவில் குழம்பெடுத்து
வன்னக்கலை ஓவியத்தில்
நானெழுதும் புத்துருவாய் வந்திட்டாள் - தன்னில்
நம்பிக்கையை வைத்தி டெனத் தந்திட்டாள்!
கானகத்துத் தென்றலிலே
கலந்து வரும் தேன்மணம் போல்
பூநகைகொண் டென்னருகில் வந்திட்டாள் - மனப்
புத்துணர்வைக் கொள்கஎனத் தந்திட்டாள்!