பக்கம்:பேசும் ஓவியங்கள்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


நாம் இருவர்


நாம் இருவர் ஒன்று சேர்ந்து
நடந்துவரும் போது - கொள்ளும்
நன்மகிழ்வின் இன்பத்தினை
நவில உவமை ஏது?
பூம்பொழிலில் துள்ளியாடும்
புத்திளமை மான்போல் - ஒரு
காம்பலர்ந்த இருமலராய்
களித்து வந்தோம் தேன் போல் !
 
தோளினோடு தோள் உராய்ந்து
தோய்ந்து வரும் போது - நமில்
துளிர்த்து மலரும் உணர்ச்சினை
சொல்ல மொழியும் ஏது?
மூளுமனக் கனவிரண்டும்
மொழியில் ஆடிப்பாடி - நமில்
முத்து முத்தாய் காதல் அலை
முழங்கியதே கோடி!

விழி நான்கும் நமை மறந்து
விருந்தருந்தும் போது - விளை
வேட்கைக்கிணை விளம்புதற்கு
வையமீதில் ஏது?
மொழி மிழற்றி அயரும் உலா
முட்டுமானத் தின்பம் - கொண்டோம்
மூதுலகம் எவ்வழியில்
மூட்டிவிடும் துன்பம் !