பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அல்லற்படுகின்ற மக்களை, சற்று சிந்திக்க வைத்து சாந்தி அளிக்கவும். சுகம் கொடுக்கவும் கூடிய ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவதுதான் பிராணாயாமம் ஆகும். ஆயுளைக் கூட்டும் ஆற்றல் காற்றுக்கு உண்டு. அழகைக் கொடுத்து, அறிவை வளர்க்கும் சக்தி காற்றுக்கு உண்டு என்பது பரிபூரணமாக விளங்கும் பக்குவமான பண்பாற்றல்தான் பிராணாயாமம் ஆகும். உடலாகிய ஊரில், ஐம்பொறிகள் என்ற மக்கள் இருக்கின்றனர். (கண், காது, மூக்கு, வாய், மெய்) இந்த ஐம்பொறிகளுக்கும் தலைவனாக ஆருயிராக விளங்குவது மனம் இந்த தலைவன் செல்லுவதற்கு குதிரை என்ற ஒன்று உண்டு. அந்த குதிரைதான் உயிர்ப்பு என்கிற பிராணவாயு. அந்த குதிரையை அடக்கி ஆள்பவர்கள் ஆனந்தமடைவர். அடக்க முடியாவிட்டால், குதிரை துள்ளி எழுந்து தூக்கியெறிந்து விடும். துன்பப்பட்டுப் போவார்கள் சக்தியற்றவர்கள் என்பதை புரிந்து கொண்டால் போதும். இப்படி பிராணவாயுவின் பெருமையைப் பாடுகிறார் திருமூலர். ஐம்பொறிகள் தான், இந்த உடலை உலக பாசத்திற்குள் பற்றுக்குள் கொண்டு போகும் குதிரைகளாக விளங்குகின்றன. ஆசைகளுக்கும் அலங்காரங்களுக்கும் ஆவித் துடிக்கத் தாவித் திரியும் ஐம்புலன்களை, அடக்கி ஒடுக்க முடியாவிட்டாலும், சற்றேனும் சமாதானமாக இருக்கச் செய்ய முயலலாம் அல்லவா! "ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்தமாமே.” அப்படியென்றால், பிராணவாயு எப்படித்தான் நமது உடலுக்குள் உலவுகிறது. உலா வருகிறது. உற்றுழி உதவுகிறது. உயர்ந்த காரியங்களை ஆற்றுகிறது என்ற வினாக்களுக்கு விடைகளை காண்போம். அப்போது தான் பிராணாயாமத்தின் பெருமை புரியும்.