பக்கம்:பொங்கற்பரிசு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எழுச்சிப் பாட்டு!


கார்முகில் தவழும் கீழ்வான்
பூத்தது தங்கக் கட்டி !
நீர்நிலை நன்செய் புன்செய்
நெடுகிலும் பொன்; பொன்; பொன்னாம்!
ஊரெலாம் மகிழ்ச்சிப் பொங்கல்!
உளமெலாம் எழுச்சிப் பாட்டு !
சீர்நமக் களிக்க வந்த
செங்கதிர் வாழ்த்தாய் தம்பி!

1


தளிரெலாம் பைம்பொன் தாது !
தழையெலாம் இருட்டுப் பச்சை !
வெளியெலாம் கிளியின் கூச்சல்
வீடெலாம் அழகின் தேக்கம்!
குளிர்பசி ஊதை தூறல்
குறைந்ததே; நிறைந்த தின்பம் !
களிப்பூட்ட வந்த புத்தம்
புதுக்கதிர் வாழ்த்தாய் தம்பி !

2


களமெலாம் வைக்கோற் குன்றம் !
காடெலாம் புள்ளின் பாட்டு !
குளமெலாம் பாசிப் போர்வை !
குன்றெலாம் பூக்கள்! மக்கள்
உளமெலாம் மகிழ்ச்சிப் பொங்கல்!
ஊரெலாம் இசைமு ழக்கம்!
வளமெலாம் பெருக்கி இன்று
வந்ததை வாழ்த்தாய் தம்பி!

3

12
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/20&oldid=1148976" இலிருந்து மீள்விக்கப்பட்டது