பக்கம்:பொங்கற்பரிசு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பச்சை விருந்து!


கொந்தளிக்கும் நிலக் குளிர்கடல்மேற் செங்கதிரோன்
வந்தான் ; நலமே தரவந்தான் ! - செந்தேன்
கொழிக்கும் மலர்க்காடு; கொல்லேயிலும் செந்நெல்;
விழிக்கெங்கும் பச்சை விருந்து ! 1


மண்ணிற் புதுமலர்ச்சி, வானிற் புதுமலர்ச்சி,
கண்ணிற் புதுமலர்ச்சி கண்டோமே !-விண்ணில்
எழுந்தான் புதுப்பரிதி ! 'பொங்கலோ பொங்கல்'
எழுந்தது வான்பரப்பி லே ! 2


நீரெல்லாம் பூக்கள்; நிலமெல்லாம் செங்கரும்பாம்!
ஊரெல்லாம் புத்தரிசிப் பாற்பொங்கல்! - சீர்தழுவும்
அங்கை மகளிர் அகங்குளிரக் கீழ்வானிற்
செங்கதிரோன் வந்தான் சிரித்து! 3


குளிரொடுக்கி மூடுபனிக் கொட்டம் ஒடுக்கி
அளிசெய்தான் செங்கதிரோன்! வாழ்க!-களிவண்டு
தாதுண் டிசைபாடும் ஆளன் திருத்தோளில்
மாதுண் டிசைபாடு வாள்! 4


செங்கரும்பை மக்கட்கே இல்லச் செழுங்கரும்பு
பங்கிட் டளித்தாள் பரிவோடு - பொங்கல்
இலைஇட்டாள் எல்லார்க்கும்; இட்டாள் இசைத்தேன்;
தலைப்பரிதி வாழ்த்தினா ளே! 5

35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/43&oldid=1147553" இலிருந்து மீள்விக்கப்பட்டது