பக்கம்:பொங்கற்பரிசு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அத்தனையும் இன்பம்!

கீழ்க்கடல்மேல் தொடுவானில் தங்கத்தாம் பாளம்
இருள்திரையைப் பனிகுளிரைக் கிழித்துவந்த தைபார்!
வாழ்வளிக்கும் பொன்னொளிவான் பூத்ததடா!வாழ்க!
வறுமையிலை; அறியாமை இனிச்சிறிது மில்லை!
ஆழ்கடலும் நிலப்பரப்பும் காடுமலை நன்செய்
அத்தனையும் இன்பமயம்! அத்தனையும் பொன்னாம்!
சூழ்ந்துவந்த இடரெல்லாம் தமிழகத்தில் இன்றே
சுக்குச்சுக் கானதுவாம்! தைப்பொங்கல் வாழ்க!

பொங்குதடா இன்பம்!

லகிருளைக் கிழித்துவந்து கீழ்த்திசையில் வெய்யோன்
உயர்கின்றான்!என்சொல்வேன்! பொங்குதடா இன்பம்!
பலகலையில் முன்னேறிப் பழந்தமிழர் வாழ்வை
நம்மக்கள் பற்றிவிட்டார்; இனியில்லை துன்பம்!
கலகலப்பிற் சோலைகளும் வயல்வெளியும் காடும்
கைகாட்டி யழைப்பதைப்பார்!உளம்குளிரும் பொங்கல்
பலகுரலில் எழுந்தெழுந்து வான்பரப்பில் முட்டும்!
பகுத்துண்டு வாழ்ந்திடுவோம்! பிறர்க்கீழ்வா ழோமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/51&oldid=1148715" இலிருந்து மீள்விக்கப்பட்டது