இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இருந்தது. ஆதலால், நான் அதை ஆசையோடு விரைந்து எடுத்தேன். பிள்ளைகளே, அது என்ன என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் ? அது ஒரு பொன் நாணயம். அதை நான் அதுவரையில் பார்த்ததே இல்லை. ஆயினும், அது ஒரு நாணயமே என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகம் உண்டாகவில்லை. ஏன் என்றால், அதில் ஒரு பக்கம் நமது இராஜாவின் தலை இருந்தது. மற்றொரு பக்கம் எழுத்துக்கள் சில இருந்தன. அது காலணாவைவிடச் சிறியதாக இருந்தது; ஆனால், கனமாக இருந்தது. மஞ்சளாகவும், பளபளப்பாகவும் இருந்ததால் அது ஒரு பொன் நாணயமே என்று நான் நிச்சயமாக நம்பினேன்.