பக்கம்:பொன் விலங்கு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

பொன் விலங்கு

இருப்பதுபோல் அமைதியான நாட்டுப் புறங்களிலும் வனப்பு வாய்ந்த மலை நகரங்களிலும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் ஏற்படுகிறவரை இந்த நாட்டில் சர்வகலாசாலைப் படிப்பு ஒரு புதிய மறுமலர்ச்சியை அடையப் போவதில்லை. ஒழுங்கு, மரியாதை, கட்டுப்பாடுகளோடு மாணவர்களை உருவாக்கி ஆசிரியர்கள் பெருமதிப்பை அடையும் கல்லூரிகள் அத்தி பூத்தாற்போல் இருக்கின்றன. தகுதி வாய்ந்த விரிவுரையாளர்கள் தேவை என்று கல்லூரிகளில் ஆசிரியரைத் தேடி விளம்பரம் செய்கிறாற் போல - இலட்சியவாதியான சிறந்த ஆசிரியர் ஒருவர் வேலை செய்யத் தகுதி வாய்ந்த கல்லூரி ஒன்று தேவை என்பதற்காக நானே பத்திரிகையில் விளம்பரம் செய்யலாம் என்று பார்க்கிறேன்" என்று விதண்டாவாதம் பேசி நண்பர்களிடம் விவாதம் செய்கிற சத்தியமூர்த்தியே மனம் ஒப்பி ஒரு கல்லூரி வேலையைத் தேடிக்கொண்டு புறப்பட்டதைக் கண்டு அவனோடு பழகியவர்கள் ஆச்சரியம்தான் அடைந்தார்கள். சத்தியமூர்த்தி அந்தக் கல்லூரியின் விரிவுரையாளனாக விரும்பி யதற்கு இரண்டு சரியான காரணங்களிருந்தன. ஒரு காரணம்: அந்த ஊரின் இயற்கை வனப்பு. மற்றொரு காரணம்: அந்தக் கல்லூரியின் வனப்பு.

தமிழ்நாட்டின் செழிப்பான ஆற்றங்கரைகளிலும் சாலைகள் செல்லாத மூலை முடுக்குகளிலும் இப்படி எத்தனையோ அழகான ஊர்கள் இருக்கலாம். ஆனால் மல்லிகைப் பந்தலின் அழகும் இயற்கை எழிலும் அவை எல்லாவற்றிலிருந்தும் தனியாகப் பிரித்து சிறப்பாகச் சொல்லத் தகுந்த ஒன்றே தவிர அவற்றோடு சேர்த்து அவற்றில் ஏதோ ஒன்றாக வைத்து எண்ணத் தகுந்தது அல்ல. அப்படிச் சிறப்பித்துச் சொல்லுவதற்குத் தனியாக ஒரே காரணம் மட்டுமில்லை. சிறப்பாகப் பல காரணங்கள் இருந்தன.

கிராமத்தின் அழகுகளும், நகரத்தின் செளகர்யங்களும் நிறைந்த ஊர், கவர்ச்சி மிக்கதாக இருப்பதற்குக் கேட்பானேன்? மண்ணின் பெருமை - அதன் மேலே வாழும் மனிதர்களின் குணங்களை வைத்துக் கணிக்கப்படுகிறது என்பது சரியானால் மல்லிகைப் பந்தலில் அப்படிக் குணங்களை உடைய பெருந்தன்மையாளர் சிலர் எப்போதும் இருந்தார்கள்; இப்போதும் இருக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/10&oldid=1405620" இலிருந்து மீள்விக்கப்பட்டது